Thursday, February 6, 2020

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்! ( கம்பன் என்ன சொல்கிறான் -17)


Image Courtesy : Google.
கம்பனும், கருத்து சுதந்திரமும் படிக்க இங்கே க்ளிக்கவும்.


பண்டிகை நாட்கள் என்றால் டி.வி. காரர்களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

"10 மணிக்கு, 1 மணிக்கு, மாலை 5 மணிக்கு, இரவு 11 மணிக்கு என்று  சினிமாவாய் போட்டுத் தள்ளி விடுவார்கள்.

அதிலும் அந்த சினிமாக்களுக்கு அவர்கள் கொடுக்கும் 'ஹைப் இருக்கே' .... அருமையான காதல் கதை.....காதலையே ஓவியமாய் தீட்டிய படம் என்று.... காதைக் கிழிக்கும்  ம்யூசிக்குடன் ....சொல்லி மாளாது.

காதலை உருகி உருகி எடுக்கப்பட்டதாய் சொல்லிய படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது..
அப்படியொன்றும்  அசத்தலாய் இல்லை படம். என்ன இருந்தாலும் நடிப்புதானே அது..

ஆனால் கம்பர் எழுதிய காவியத்தில், ராமனும், சீதையும் உண்மையில் காதல் வயப்படுகிறார்கள். அதனால் தானோ என்னவோ அந்தத் திவ்யக் காதல் நம் மனதில் ஆழமாய் பதிந்து விடுகிறது.

கம்பனின் கைவண்ணத்தைப் படித்த பின் இவரையும், அழைத்துக் கொண்டு  மிதிலைக்கே சென்று விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உன்னுடன் அவரும் வந்து விட்டாரா என்று யாரும் கேட்க வேண்டாம்."அண்ணலும் நோக்க அவளும் நோக்கியக் " காட்சியைக் காண என்னுடன் அவரில்லாமலா?

மிதிலைத் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

" அறுபத்து மூவர் திருவிழா போலல்லவா இருக்கிறது கூட்டம்." அவரிடம் நான் சொல்ல...

எப்பவும் போல்," தொணத் தொணன்னு பேசாமல் அங்கே பார்.." அவர் காட்டியத் திசையில் பார்த்தேன்.

ஒரே மக்கள் வெள்ளம்.. "எதைப் பார்க்க சொல்கிறீர்கள்? "

அங்கே பார்," ராமன் தெரியவில்லை . அருகில் இளைய பெருமாள் ." 

மக்கள் கூட்டத்தின் நடுவில் நான் கண்களால் துழாவிப் பார்க்க, ராம தரிசனம் கிடைக்க ,சொல்லி மாளா மகிழ்ச்சி...கைகளால் உடனே கண்ணத்தில் போட்டுக் கொண்டேன்." யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு தரிசனம்." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

திடீரென்று ஒரே சலசலப்பு ...

"என்ன ஆச்சு? "

 பக்கதில் இருந்த ஒருத்தர் " அரண்மனை உப்பரிகையிலிருந்து  பூப்பந்து விழுந்து விட்டதாம். ராஜகுமாரி சீதை விளையாடிக் கொண்டிருந்த பந்தாகத் தான் இருக்க வேண்டும்." சொன்னார்.

அதற்குள் " அங்கே வா... ராம தரிசனம் நன்றாகக் கிடைக்கும்." என்று சற்று மேடானப் பகுதிக்கு என்னவர் அழைத்து சென்றார்.

ஆமாம்..இங்கிருந்து பார்த்தால் ராமன் கைகளில் பூப் பந்துடன் நிற்பது தெரிந்தது. மீண்டும் கை கூப்பி வணங்கிக் கொண்டேன். 

"உப்பரிகையில் பார் சீதை" இவர் சொல்ல...

பார்த்தால்...அருமையான் திவ்ய காதல் நாடக  அரங்கேற்றத்தைக் காணும் பேறு கிடைத்தது.


ராமன் தோள் மேல் தான் அந்தப் பூப் பந்து விழுந்திருக்கிறது. 

யார் போட்டிருப்பார்கள் என்று கையில் பந்துடன் சுற்று முற்றும் பார்க்கிறான் ராமன். யார் என்று புரிபடுவதற்குள்....

" நீல மாலை ....உன்னால் தானடி.. நீ சரியாகப் போட்டிருந்தால் இப்படி ஆகியிருக்குமா?" என்கிற குரல் வந்த திசையில் பார்க்கிறான்.

அரண்மனை உப்பரிகையிலிருந்து தான் இந்தப் பந்து விழுந்திருக்கிறது என்று ராமனுக்குப் புரிய ...அண்ணாந்து பார்க்க...

சீதையோ ," யார் மேல் பந்து விழுந்ததோ?" என்கிற அச்சத்துடன் கீழே பார்க்க...

இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

(இதல்லவோ "கண்டவுடன் காதல்.")

அதோடு நிற்கவில்லை... இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டன.இருவரும் பார்த்துக் கொண்டால் சட்டென்று பார்வை நகர சாத்தியக் கூறுகள்  அதிகம். அதனால் தான் கம்பர், இருவர் பார்வைகளும் கவ்விக் கொண்டன என்று சொல்லி விட்டார். பார்வைகள் விடுபடவேயில்லையே.
(ஆமாம்...நேரே பார்த்தாற் போல இப்படி விரிவாக சொல்கிறாயே? என்று கேட்க வேண்டாம். கம்பன் வரிகளைப் படித்தால் இந்தக் கற்பனை தானாய் உஙகள் மனக் கண்ணிலும் விரிந்து விடும்.அதற்கு நான் கியாரண்டி.)

அதற்குள் நீலமாலை," ராஜகுமாரி என்ன ஆச்சு ? ஏன் அங்கேயே நின்று கொண்டு பார்க்கிறீர்கள்?" கேட்க...

"ராஜகுமாரி......ராஜகுமாரி!" மீண்டும் மீண்டும், சீதையின் தோழிகள் கூப்பிட்டாலும் சீதை திரும்பவேயில்லையே. 

அவள் பார்வையைத் தான் ராமன் திருடிக் கொண்டு விட்டானே.பார்வையை மட்டுமல்ல சீதையின் இதயத்தையும் அல்லவா திருடி விட்டான். 

"அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள் " காட்சியை என்னமாய் படமெடுத்திருக்கிறார் கம்பர் பாருங்கள்..

எண் அரும் நலத்தினாள்
    இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
    கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
    உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
    அவளும் நோக்கினாள்.

அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை, நின்ற பொழுது, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கவர்ந்து உண்ணவும்,இருவரது அறிவும், நிலைப் பெற்று இருக்காமல்  ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், ராமனும், சீதையைப் பார்த்தான்.சீதையும், ராமனைப் பார்த்தாள்.

"எத்தனையோ தடவை இந்தக் காட்சியைப் பற்றி படித்தாகி விட்டதே " என்று நினைக்க வேண்டாம். எத்தனை முறைப் படித்தாலும், திகட்டாத தெள்ளமுது .  நிறைய முறைப் படிச்சாச்சு என்று சொல்லிக் கொண்டே படித்து விட்டீர்களே! அது தான் கம்பனின் கைவண்ணம்....

வேறொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...






Sunday, January 12, 2020

கம்பனும், கருத்து சுதந்திரமும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-16)



Image Courtesy : Raja Ravi Press (Public Domain)

சூடான நெய்யில் ஜீரகம் போட்டு  ரசத்திற்கு தாளித்து விட்டு கேசை ஆஃப் செய்யவும்,

"காச் ......மூச்" என்று சத்தம் காதில் விழவும் சரியாயிருந்தது.

'யாரது சண்டை  போடுவது?' .... என்று ஹாலுக்குள் எட்டிப் பார்த்தேன்.

என்னவரோ டிவியை விட்டு கண்ணையே எடுக்கவில்லை.
அட...சண்டை மண்டை உடைந்து கொண்டிருந்தது டிவியில் தான்.

சாதரணமாகவே அரசியல் எனக்குப் புரிபடாத ஒன்று.  அதிலும் இந்த டிவி சண்டைகளில் எல்லாம் ஆர்வமே இருப்பதில்லை எனக்கு.

இவருக்கு மட்டும் எப்படி இந்த சண்டை புரிகிறது? இல்லை வெட்டி சீன் போடுகிறாரா? ...பார்த்து விடவோம் என்று நானும் சண்டையை கவனிக்க ஆரம்பித்தேன்.

"கருத்து சுதந்திரம் இல்லை.... கருத்து சுதந்திரம் இல்லை.... "என்று விடாமல் ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். வேறு யார் பேசுவதும் காதில் விழ விடாமல் மீண்டும் மீண்டும் " கருத்து சுதந்திரம் போயே போச்சு. நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடையாது ." என்று உச்ச ஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார்.

எனக்கு சுத்தமாக புரியவேயில்லை. "மஹானுபவரே!இப்படி உச்சஸ்தாயில், கருத்து சுதந்திரம் இல்லை என்று கத்தும் அளவுக்கு உங்களுக்கு நாடு சுதந்திரம் கொடுத்திருக்கே.வேறென்ன கருத்து சுதந்திரம் போச்சு என்கிறீர்கள்? இந்தியாவுக்கே கேட்கிறார் போல கத்துகிறார்.  பிறகு என்ன சுதந்திரம் இல்லை என்கிறார்? ஒன்றுமே புரியவில்லை

சரி ..போ... அரசியலாவது ஒன்றாவது....என்று தோன்றியது எனக்கு. என்னவோ கத்திக் கொண்டு போகட்டும். நமக்கும் அரசியலுக்கும் எட்டாத தூரம் என்று விட்டு விட்டேன். 

ஆனால் இந்த சமயத்தில் கம்பனை நினைக்காமல் இருக்க முடியவில்லை....

விசுவாமித்திரர் ராம லக்‌ஷமணர்களை அழைத்துக் கொண்டு காட்டு வழியே நடந்து செல்கிறார்.

நாமும் காட்டு வழியே அவர்களைப் பின் தொடர்ந்த்து செல்வோம் வாங்க...
(கற்பனையிலாவது பரந்தாமனை காண்போம் வாங்க..)

சுவாரஸ்யமான உரையாடல் ...

"தசரத குமாரர்களே ! இங்கு தான் அருகே என் பர்ண சாலை இருக்கிறது. அங்கு தான் நாங்கள் யாகம் செய்கிறோம். அந்த யாகத்திற்கு இடையூறு வராமல் காக்கவே உங்களை அழைத்து வந்தேன்." விசுவாமித்திரர் சொல்ல..

பணிவுடன் ராம லக்ஷ்மணர்கள் " அப்படியே செய்கிறோம்." என்று சொல்ல

விசுவமித்திரர் மேலே தொடர்ந்தார்...
" அரக்கர்கள் மாமிசங்களையும், ரத்தத்தையும் மழையெனப் பொழிந்து எங்கள் யாகத்தை கெடுக்கிறார்கள்.அதிலும் அந்தத் தாடகை இருக்கிறாளே....அப்பப்பா....என்ன கொடூரம்! ....என்ன கொடூரம்!  பார்ப்பதற்கு  பெரிய எரிமலை ஒன்று நடந்து வருவது போலத் தோன்றும்..அவளைப் பார்த்தால் எமனே நடுங்கி ஒளிந்து கொள்வான் என்றால் பார்த்துக் கொள் ...ராமா"

"அவள் செய்யும் அட்டகாசம் தாங்கவே முடியாது..அவளைத் தான் முதலில் நீ அழிக்க வேண்டும் ராமா." என்று சொல்லி முடிக்கவும் 

ராமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "போரில் பெண்ணைக் கொல்வது தர்மம் இல்லையே.அதிலும் நான் செய்யப் போகும் கன்னிப் போர் இது...  ஒரு பெண்ணைக் கொன்று தர்மத்தை மீறுவதா? 
Killing a woman is a crime in war protocols.That too in my maiden ordeal.... OMG!
ஆனால் ஆசானையும் அவமதிக்க முடியாது.என்ன செய்வது....மனம் பிசைகிறது ராமனுக்கு.  
(பெண்ணென்றால் பேயும் இரங்கும். கருணையின் வடிவமான பரந்தாமனுக்கு சொல்லவும் வேண்டுமா.?)

 முனிவரிடம் பெண் கொலைப் பாவம் இல்லையா? கேட்டுப் பார்ப்போமா? நினைத்துக் கொண்டான்.  உடனே மனதை மாற்றிக் கொண்டு விட்டான் ராமன்.

பிறகு, வேறு வினையே வேண்டாம். .அடுத்த கணமே ," எனக்குத் தெரியாத தர்மம், பாவ புண்ணியம் எல்லாம்  சிறுவர்களாகிய, உங்களுக்குத் தெரிந்து விட்டதோ என்று முகம் 'ஜிவுஜிவுக்கக்' கோபப் படுவாரே...அதோடு விடுவாரா?. இந்தாப் பிடி... 'சாபம்' என்று சபித்து விடுவாரே"  நினைத்துக் கொண்டு அமைதி காத்தான் ராமன்.

ராமனுடைய பேரமைதியை வைத்தே புரிந்து கொண்டு விட்டார் விசுவாமித்திரர். பரந்தாமனுக்கே பாடம் எடுக்கும் ஆசான் ஆயிற்றே! அவருக்குத் தெரியாதா?

ராமனைப் பார்த்து," ராமா அவளை நீ பெண்ணென்று நினைக்கிறாய். ஆனால் அவள் ஒரு அரக்கி ... என்று அவளுடைய History, Geography எல்லாம் சொல்கிறார்."

மேலும் தொடர்கிறார்...." அவள் இந்தக் கானகத்தில் ஒருத்தரை விடவில்லை. தரையெல்லாம் பார். மண் சிவப்பாக இருப்பது இவள் உபயம் தான். எல்லோரையும், அடித்து சாப்பிடுவதே அவள் பழக்கம்." என்று சொல்லி விட்டு ராமனைப் பார்த்தார் முனிவர்.

இவ்வளவு சொல்லியும், ராமன் வில்லில் நாணேற்றாமல் அமைதியாய் இருந்தான்.

புரிந்து விட்டது விசுவாமித்திரற்கு,"ராமா நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று புரிந்து விட்டது ராமா. ஒருத்தரை விடாமல் கொல்கிறாள் என்று சொல்வதற்கு என்னையும், மற்ற ரிஷிகளையும் உயிரோடு விட்டு தானே வைத்திருக்கிறாள். அப்படி முனிவர் சொல்வது போல் ஒன்றும் கொடூரமானவள் இல்லை போலிருக்கிறது." என்று தானே நினைக்கிறாய்.

ராமா ! நானும் மற்ற ரிஷிகளும் அவளுக்கு "Noodles" போல் தெரிகிறோம் என்று நினைக்கிறேன்.  அவளுடைய பசிக்கு நாங்கள் அவள் கடை வாய் பற்களுக்குக் கூட காண மாட்டோம். அதனால் தான் எங்களை விட்டு வைத்திருக்கிறாள். நானே இன்னும் சற்று புஷ்டியாக இருந்திருந்தால் இன்னேரம் என்னையும் கொன்று முடித்திருப்பாள். அவளை பெண் என்றே எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தயங்காமல் வில்லை எடு.. நாணேற்று...தாடகையை வதம் செய்! என்று விசுவாமித்திரர் முடித்தார்.

கம்பர் இதை எப்படி நான்கே வரிகளில் சொல்கிறார் என்று பார்ப்போமா?...

தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்


மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! 

தீமை  என்று இருப்பவையாகிய  எல்லாச் செயல்களையும்  செய்துமுடித்து, எம்மைப் போன்ற  முனிவர்களைச் (சாரமில்லாத) சக்கை  என்று  உண்ணாது  விட்டாள். அவள் செய்த தீய செயல்களில்  இதுவே  குறை. இத்தகையவளை  என்னவென்று  நினைப்பது? மணிகளாலான  அணிகலன்களை  அணிந்திருக்கும் ராம பிரானே!இத்தகைய  கொடுஞ்செயல்   உடையவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது . 

அருமையாக இல்லை கம்பனின் படைப்பு...! ரசித்துக் கொண்டிருங்கள்...
மற்றொரு கம்பராமாயணப் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.


Tuesday, December 17, 2019

கம்பனும், ஆன்லைனும்.(கம்பன் என்ன சொல்கிறான் -15)


Image Courtesy : Raja Ravi Press (Public Domain)
" பாருங்க நீங்க சொல்ற பூத்தொட்டி ஆன்லைனில் கிடைக்குது. எத்தனை வேணும் நமக்கு?" அவரிடம் கேட்கவும்,

 'ஐந்து வேண்டியிருக்கும் நமக்கு' 

ஆர்டரும்செய்தாச்சு.

பிறகு அந்த ஆர்டர் பற்றி சுத்தமாக மறந்தும் விட்டேன்.

இரண்டு நாள் கழித்து....

"டிங் டாங்"

கதவைத் திறந்தேன்...... டெலிவரி பாய் .

கையில் பார்சல்.

"எங்களுக்கா?" குழப்பத்துடன் கேட்டேன்.

உள்ளேயிருந்து என்னவர்," பூத்தொட்டி ஆர்டர் செய்தோமே. மறந்துட்டியா?" என்ற சொன்னதும் தான் ... நினைவிற்கு வந்தது.

கையெழுத்திட்டு வாங்கினேன்.

"ஆமாம் . நாம் பெரிய தொட்டியல்லவா ஆர்டர் செய்தோம்." என்று சொல்லிக் கொண்டே  பார்சலைப் பிரித்தேன்.

எழுந்து ஹாலுக்கு வந்து கொண்டே ," ஏன் ...கொஞ்சம் சின்ன தொட்டியாக வந்துடுச்சா? " என்னவர் கேட்க..

"கொஞ்சம் சின்னதா?.....
 பேனா ஸ்டாண்டை விடவும் கொஞ்சமே கொஞ்சம் பெரிசு. அவ்வளவு தான்." என்று சொல்லிக் கொண்டே அவரிடம் காட்டினேன். 

ஆர்டர் செய்யும் போது அகல உயரத்தைக் கவனிக்காதது யார் தப்பு? சொல்லுங்கள்..... நாங்கள் தப்பாக கணித்து விட்டு.....?

இந்த மாதிரி தாடகையைத் தப்பாக கணித்து விடப் போறோமே என்று கம்பர் கவலைப்பட்டிருப்பார்  போல் தோன்றுகிறது.

அதனால் பால காண்டத்தில் தாடகையை எப்படி சிரத்தையுடன் வர்ணிக்கிறார் பாருங்கள்.

ராமன்,.. தாடகை என்கிற ஆக்ரோஷ பெண்மணியோடு சண்டைப் போட்டு ஜெயித்தான் என்ற நாம் சாதரணமாக நினைத்து விடக் கூடாதே என்று மெனக்கெடுகிறார்.

அவளுடைய பயங்கர  உருவத்தை எப்படி சித்தரிப்பது என்று ரூம் போட்டு யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். 


அவள் கால்களில் போட்டிருக்கும் சிலம்புகளுக்கிடையில்  பெரிய மலைகள் மாட்டிக் கொண்டு நெறிப் பட்டு நொறுங்கிப் போகின்றனவாம்.

அப்படியென்றால் எவ்வளவு பெரிய சிலம்பு? கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பெரிய சிலம்புகள் போட்டிருக்கும் கால்கள் எப்படியிருக்கும். அப்படியென்றால் தாடகை தோற்றம் எப்படியிருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறதல்லாவா!


மிகப்பெரிய உருவம் என்று சொல்லிக் காட்டி விட்டார். ஓகே! ஆனால் அவள் பலம் வாய்ந்தவள் என்று சொல்ல வேண்டுமானால் அவள் weight எவ்வளவு ?

அவளை 'வெயிட் மெஷினில்' நிற்க சொல்லியா weight பார்க்க முடியும். 

கம்பராச்சே ! அவருக்குத் தெரியாத டெக்னிக்கா?

சொல்கிறார் பாருங்கள்...

அவள் 'டங் டங் ' என்று பூமி அதிர நடக்கும் போது மலைகள் எல்லாம் நெறிப்படுவதுமில்லாமல் சில மலைகள் அவள் சிலம்பில் மாட்டிக் கொண்டு விட்டனவாம்.(கொலுசில் புடைவை மாட்டிக் கொள்வது போல)  அவளோ தர...தர... என்று மலைகளை இழுத்துக் கொண்டு அனாயசமாக நடந்து வருகிறாளாம்.

அது மட்டுமா! அவள் பாதம் வைக்கும் இடமெல்லாம் பெரிய பெரிய குழிகள் உருவாகிறதாம். அப்படி உருவான குழியில் கடல் நீர் ஓடி வந்து ரொம்பி விடுகிறதாம். 

ஆமாம் அயோத்தி அருகில் எங்கே கடல் வந்தது? என்று கம்பருடைய Geography புலமையை யாரும் சந்தேகிக்க வேண்டாம்.

தாடகை கால் வைத்ததால் ஏற்பட்டக் குழி, Sea Level ஐ விடவும் கீழே போய் விட்டிருக்கும்.  
அதனுள் கடல் நீர் ஓடி வர எத்தனை நேரம் பிடிக்கும் சொல்லுங்கள். ? உங்களுக்கு சுனாமி நினைவிற்கு வந்திருக்குமே.(கம்பருடைய கற்பனை கடலை விட ஆழமாக அல்லவா இருக்கிறது!)

அவளைப் பார்த்தாலே யமன் அஞ்சி நடுங்கி குகைக்குள் ஓடி ஒளிந்து கொள்வானாம்.

இப்பேர்பட்ட பயங்கரமான தாடகையை, இளைஞனான ராமன் வதம் செய்யப் போகிறான் என்று சொல்ல வருகிறார் கம்பர்.

தாடகையை விவரிக்கும் கம்பன் வரிகள் இதோ...
பால காண்டம். தாடகை வதைப் படலம். பாடல் எண்  389

சிலம்புகள் சிலம்பு இடை
    செறித்த கழலோடு
நிலம்புக மிதித்தனள்;
    நெளித்த குழி வேலைச்
சலம்புக, அனல் தறுகண்
    அந்தகனும் அஞ்சிப்
பிலம்புக, நிலை கிரிகள்
    பின் தொடர, வந்தாள்.

கால்களில் அணிந்த சிலம்புகளுக்கு இடையே  மலைகளைச் செறியும்படி வைத்த கால்களோடு நிலம் கீழே புகும்படி மிதித்தாள். அதனால் நெளியப் பெற்ற குழியில் கடல் நீர் புகுந்தது. அவளைப் பார்த்து நெருப்பென விழிக்கும் வலிமை மிக்க எமனும் பயந்து, குகைக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, நிலத்திலுள்ள மலைகளெல்லாம் பின்னே தொடர்ந்து  வர, தாடகை நடந்து வந்தாள்.

ராட்சசியான தாடகையை ராமனின் அம்பு எப்படிக்  கொன்றது என்பதைப் பிறகு பார்ப்போமா?

நன்றி.



Monday, December 9, 2019

கம்பனும், கொடியும்.(கம்பன் என்ன சொல்கிறான்-14)



Image Courtesy : Google.

" அங்கே பாருங்க .  அவள் கூப்பிடறாள் பாருங்க.."


"யாரு?.....யாரை?"

"நம்ம ரெண்டு பேரையும் தான்."

யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று கூட்டத்தின் நடுவில்.. கணவன் துழாவிப் பார்க்கிறான். யாரையும் காணவில்லையே....யாரை சொல்கிறாள் இவள் .

தி.நகர் தீபாவளி நெரிசலில் எளிதில் கண்டு பிடித்து விட முடியுமா என்ன?

"தெரியலையாங்க... அதாங்க  ...... வணக்கம் சொல்லி கூப்பிடுகிறாள் பாருங்க அந்தப் பெண்."

மனைவி யாரைக் காட்டுகிறாள் என்று புரிந்து போனது கனவனுக்கு.

ஜவுளிக் கடை பொம்மை.

அந்த ஜவுளிக் கடைக் கூட்டம் மட்டும் பயமுறுத்தவில்லை.பர்சின் கனமும், கணிசமாய் குறையுமே என்கிற பயம் தான் கணவனுக்கு. 

சாமர்த்தியமாக சமாளித்தான் கணவன்..
" அடி அசடே ! அந்த மெஷின் பொம்மை சொல்றது உனக்குப் புரியல ?

என்ன?

"நன்றி!.. வீட்டுக்குப் பத்திரமா போய் வாருங்கள் " அப்படின்னு சொல்லுது.  போகலாம் வா.. என்று கணவன் சொல்ல...மனைவி "க்கும்...."என்று கழுத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.


மெஷின் பொம்மை "வா" என்று சொல்வதில் என்ன அதிசயம் சொல்லுங்கள். 
மிதிலை நகரக் கொடிகள்  செய்வதைப் பாருங்கள்...

தூரத்தில் விசுவாமித்திரர், ராம லஷ்மணர்களுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  வயதானதால் ஏற்பட்ட அசதியோ என்னவோ... ஒரு சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் போலும்.
அவர் நின்றதும், பின்னால் வந்த தசரத குமாரர்களும் 'பிரேக்' அடித்தாற் போல் நின்று விடுகிறார்கள் .  குருவைத் தாண்டிப் போய் விடக் கூடாதல்லவா? அதோடு விசுவாமித்திரர் கோபம் பிரசித்திப் பெற்றதாயிற்றே. எதற்கு வம்பு ? அவர் வாயில் விழுந்து புறப்பட வேண்டுமா ? என்றும் இவர்கள் நின்றிருக்கலாம்.

சரி. எதற்கோ நின்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அதுவும் மிதிலைக்கு மிக அருகில்....

மிதிலையில் சீதாவின் சுயம்வரத்தை முன்னிட்டு கோலாகலமாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எங்கும் மலர்களாலும், கொடிகளாலும், தோரணங்களாலும்....

ராம லக்‌ஷமணர்கள் வருவதை முதலில் பார்த்தது இந்தக் கொடிகளாய் தான் இருக்கும். உயரத்தில் இருப்பதால்..

ராஜகுமாரி சீதையை மணமுடிக்கப் போகும் ராமன் வருவதைப் பார்த்து கொடிகள் மகிழ்ச்சியில்  ஒன்றொடு ஒன்று கைக் கோர்த்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தன. (தூக்குத் தோரணக் கொடிகள் - அதாவது மாவிலைத் தோரணம் போல் கட்டப்பட்டக் கொடிகள்.)

அவர்கள் பிரேக் போட்டதைப் பார்த்ததும், கொடிகள் ," என்னடா இது? இவர்களுக்கு மிதிலைக்கு வழித் தெரியவில்லையோ? Google Map பார்க்க வேண்டியது தானே." பேசிக் கொண்டனவோ.

"ராமா ..... வாடா.... ராமா...நீ எங்கே left, Right என்று திரும்பிப் பாக்கறே? மிதிலை இங்கே தான் இருக்கு.  உன் கரம் பற்றப் போகும்  சீதை இங்கு தான் இருக்கிறாள். " என்று கத்த வேண்டும் போல் இருந்திருக்கும்.

ஆனால் கொடி ஆயிற்றே! எப்படிக் கத்த முடியும் சொல்லுங்கள். 

அதனால்....master plan செய்து விட்டு கை கோர்த்துக் கொண்டு ரெடியாக காத்துக் கிடந்தன.

ஒரு பெரிய காற்று அடித்தது. தங்கள் பிளானை நிறைவேற்றிக் கொண்டன...எப்படித் தெரியுமா?

எல்லாம் ஒன்றாக காற்றில் மேலே பறந்து ராமனைப் பார்த்து," வா...வா...." என்பது போல் பட..பட...என்று அடித்துக் கொண்டனவாம்.

கம்பனுக்கு மட்டுமே இப்படியொரு கற்பனை உண்டாகும்..

இதை விவரிக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போமா...

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்: என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


காவல் மிக்க அந்த மிதிலை நகரம்," திருமகளானவள் குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து, நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால் என்னிடம் வந்து பிறந்துள்ளாள்" என்று கூறி பெரிய அழகிய கொடிகள் என்கிற தன் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டுவது, தாமரைப் போன்ற கண்களைக் கொண்ட ராமனை விரைவில் வந்து சேர்க என்று அழைப்பதைப் போன்றுள்ளது.

கம்பன் சொல்லும் காட்சி .....வீடியோவாய் உங்களுக்கு விரிந்திருக்குமே! ரசித்துக் கொண்டிருங்கள்....

வேறொரு கம்பனின் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்..
நன்றி.

Monday, December 2, 2019

கம்பனும், கொசுவும் ( கம்பன் என்ன சொல்கிறான் - 13)




பட உதவி ; www.dinakaran.com

'ஙொ....ய் ... 'சத்தம் சன்னமாய் வந்தது.
"காதருகில் 'கிசு கிசு' என்று கொசு என்ன ரகசியம் சொல்கிறது. " கிண்டலாக அவரிடம் கேட்டேன்.

" Please Wait. சீக்கிரமே உன் காதுக்கும் கொசு வழியாகவே அந்த ரகசியம் எட்டும்." அவரும் பதிலுக்குக் கிண்டலடிக்க, 
(கொசு விரட்டிக்கெல்லாம் 'பெப்பே' என்கிறது கொசு.)

கொசுவைப் போல வண்டுகளும் ரீங்காரம் செய்யுமே.

வாங்க...மிதிலைக்குப் போய் அதையும் பார்த்து விடலாம்.

மிதிலாபுரி சொர்க்கபுரியாக காட்சியளிக்கிறதே!
மக்களெல்லாம் என்ன மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஆடுவதும், பாடுவதுமாய்... இருக்காதா பின்னே. திருமகளே அங்கே அவதரித்திருக்கிறாளே! வளத்திற்கு என்ன குறைவு இருக்கப் போகிறது சொல்லுங்கள்.

சரி....விஷயத்திற்கு வருவோம்...வண்டுகளும் கூட்டம் கூட்டமாய் ரீங்காரம் செய்கின்றன.

அப்படி என்ன தான் ரகசியம் பேசுகின்றன? கேட்போமா?

" எதுக்கடி இப்படி கத்தறே..அதுவும் என் காது கிட்ட வந்து?"

" அதுவா... அங்க பார். அந்தப் பெண்ணை ."

" ஏன் அவளுக்கு என்ன?"

அதற்குள் இன்னொரு வண்டு வீல் என்று அலற,

'உனக்கென்ன ஆச்சு?'

'அந்தப் பெண் படும் பாட்டைப் பார். எனக்குப் பயமா இருக்கு.'

கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவு வண்டுகளும் பதட்டத்துடன் பேசிக் கொள்கின்றன.

'எனக்கும் பயமா இருக்குடி. இந்தப் பெண்கள் ஆடும் ஆட்டத்தில் அவர்களின் மெல்லிய இடை வலிக்காதோ? எவ்வளவு மெல்லிய இடை. ஆட்டத்தின் அதிர்ச்சியைத் தாங்குமா?  '

இதைத் தான் அந்த வண்டுகள் பேசுகின்றனவாம்.

அப்படி என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் மிதிலாபுரி பெண்கள்?

ஊஞ்சல் தான்..... வேறொன்றுமில்லை.

எங்கே இருக்கு ஊஞ்சல்?

பாக்கு மரத்தில்.....


சரி... இந்த வண்டுகள் எங்கிருந்து வருகின்றன. வேறெங்கேருந்து? பெண்கள் வேகமாக ஆடும் போது, அதிர்ச்சியினால் அவர்கள் சூடியிருக்கும் பூக்களிலிருந்து தான் மேலே எழும்பியிருக்கின்றன. 

அவை மேலே எழும்பும் போது ஏற்படும் ஆரவாரம், பெண்களின் இடைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதைப் போல் இருந்ததாம் கம்பருக்கு. (கற்பனையில் கம்பருக்கு இணை கம்பரே!)


'மாசுறு பிறவி போல'  ஊஞ்சல் ஆடுவதை வர்ணிக்கிறார்.
 இறைவனடி சேர்வதும், பிறப்பெடுப்பதும் எப்படி மீண்டும் மீண்டும் நடைபெறுகிறதோ அப்படி ஊஞ்சல் முன்னும் பின்னுமாய் ஆடுகிறதாம்.
(கம்பரைத் தவிர யாரால் இப்படி ஊஞ்சல் ஆடுவதற்கு உவமை சொல்ல முடியும், சொல்லுங்கள்.)

ஒரேயடியாக தத்துவத்தில் நம்மை மூழ்கடித்து விடாமல் ' மைந்தர்  சிந்தையொடு உலவ' என்று சட்டென்று ஜனரஞ்சகமாக சொல்லி முடிக்கிறார்.
அதாவது, இடை மெலிந்த அழகான பெண்கள் ஊஞ்சலாடும் போது, அவர்களைப்  பார்க்கும் இளைஞர்கள் மனமும் கூடவே ஆடியதாம்.

பால காண்டம் . மிதிலைக் காட்சிப் படலம். பாடல் எண். 573.

பூசலின் எழுந்த வண்டு 
  மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல 

  வருவது போவது ஆகிக்,
காசு அறு பவளச் செங்காய் 

   மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் 

 சிந்தையொடு உலவக் கண்டார்.  

குற்றம் அற்ற பவளம் போல சிவந்த காய்களையுடைய, மரகதம் போல பச்சை நிறப் பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே பெண்கள் ஆடுகிறார்கள். குற்றம் நிறைந்த பிறவி போல (மாறி மாறி) வருவதும், போவதுமாக ஊஞ்சல்  ஆட, (பார்க்கும்)  ஆண்களின் மனமும் கூடவே ஆடுகின்றன. ஆரவாரத்தோடு மேலே எழுந்த வண்டுகள் அவர்கள் இடையின் மென்மைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதையும் (ராம லக்குமணர்) பார்த்தார்கள்.  

ஒரு வீடியோ பதிவைப் போல் இருக்கும் இந்த  வரிகளில் மெய் மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறதே!

இன்னொரு கம்பர் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.

Tuesday, November 26, 2019

கம்பனும், Breaking Newsம் (கம்பன் என்ன சொல்கிறான்?-12)

Image Courtesy :https;//bhagwanbhajan.com

"அம்மா! அம்மா!"

"என்னடா....?"காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டே அம்மா கேட்க...

"அம்மா.... "மீண்டும் ரிஷி கெஞ்சும் குரலில் கூப்பிட...

"என்னடா வேணும் உனக்கு?" அம்மா ஸ்ட்ரெயிட் ஆக பாயிண்ட்டிற்கு வ்ந்தாள்.

" அம்மா... காலேஜுக்கு பஸ்ஸில் போக ரொம்பக் கஷ்டமாருக்குமா. "

" ஏண்டா?"

" ஒரே கூட்டம் எப்பவும். எவ்வளவு நாள் தான் ஃபுட்போர்டிலேயே  போவது... சொல்லு."

ரிஷி எதற்கு அடி போடுகிறான் என்று அம்மாவுக்குப் புரிந்து போனது. போன வருஷத்திலிருந்து பைக் வேணும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.

"நான் அப்பாவிடம் பேசி உனக்குப் பைக் வாங்கித் தர சொல்றேண்டா." சொன்னவுடன் ரிஷி சந்தோஷமாக விசில் அடித்தான். 

ரிஷியை சந்தோஷமாக பார்க்க அம்மாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அம்மாக்களே இப்படித் தான்....மகனுக்காக அப்பாவிடம் வக்காலத்து வாங்குவது...

ஆனால் கைகேயி இன்னும் ஒரு படி மேலே போனாள்...
அவளும் பரதனுக்காக அவன் அப்பாவிடம் பேசி வாங்கிக் கொடுக்கிறாளாம். பைக் இல்லிங்க....அரசாங்கத்தையே வாங்கிக் கொடுக்க நினைக்கிறாளாம். அதுவும் பரதன் கேட்காமலே. ஆனால் பரதன் அதை ஏற்றுக் கொள்ளாததோடு, கைகேயியைப் பேய் என்றும் திட்டினான் என்பது வேறு விஷயம்.

எப்படி தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள் என்று பார்ப்போம்.

கைகேயி அழுது புலம்பி, அடம் பிடித்து தன் இரண்டு வரங்களையும் தசரதனிடமிருந்து வாங்குவதில் success ஆகிறாள். தசரதன் மிகுந்த வருத்தத்துடன் தரையில் வீழ்ந்து கிடக்கிறான்.

வரம் வாங்கியாச்சு.. அதை செயல் படுத்தணுமே. காலத்தை வீணடிக்காமல் (கணவனைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல்) ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள் கைகேயி.

உடனே அங்கே ராமனும் ஆஜர்...

அப்பாவை பார்த்து விட்டு ராமன் பதறுகிறான்." என்ன ஆச்சும்மா அப்பாவுக்கு?"

கைகேயி அவனை முதலில் சமாதானப் படுத்துகிறாள்,"உன் அப்பாவுக்கு ஒன்றுமில்லை ராமா. அவர் உன்னிடம் எதையோ சொல்லனும்னு நினைக்கிறார். எப்படி சொல்வது என்கிற தயக்கம் தான். வேறொன்றுமில்லை."

"நீங்கள் சொல்லுங்கள் அம்மா.அப்பா சொன்னால் என்ன? நீங்கள் சொன்னால் என்ன? ரெண்டும் ஒன்று தான். நான் நிறைவேற்றுகிறேன்." ராமன் வாக்குக் கொடுக்கிறான்.

" வாக்குக் கொடுப்பதில் அப்பனை மகன் மிஞ்சி விடுவான் போலிருக்கே" கைகேயி மனதுக்குள் சிரித்துக் கொண்டிருப்பாள்.

ராமனிடம் நைச்சியமாக சொல்ல ஆரம்பிக்கிறாள்.

" அது ஒண்ணுமில்ல ராமா .... நீ புண்ணிய நதிகளில் நீராடி வரணும் ராமா."

"இதென்ன பெரிய விஷயம் அம்மா..இதோ உடனே கிளம்புகிறேன். "

" அட.... இரப்பா ராமா. நான் இன்னும் முடிக்கல.."

"சொல்லுங்கம்மா.."

"அதோடு நீ தவமும் செய்ய வேண்டும் ராமா."
எங்கே தவம் செய்யணும் தெரியுமா? காட்டிற்குப் போய் தவம் செய்யணும்."

"அப்படியே செய்கிறேன் அம்மா."(இதை...இதை.....இதைதான் நானும் எதிர் பார்த்தேன் - நினைத்துக் கொண்டிருப்பாள்  கைகேயி.)

வரிசையாக ஆர்டர் பிறப்பித்துக் கொண்டே வருகிறாள் கைகேயி.
சற்றே குழம்பியிருப்பான் ராமன். என்ன ஆச்சு அப்பாவுக்கு. "நாளையிலிருந்து நீ தாண்டா ராஜா...அப்படின்னு அப்பா ராத்திரி சொன்னார். இப்ப என்னடான்னா கைகேயி அம்மா காட்டுக்குப் போ என்கிறாள். யாரைத் தான் நம்புவதோ ...என்று தோன்றியிருக்குமோ ராமனுக்கு."

Wait Rama! Wait! Here comes 
                     the Breaking News...

கைகேயி தொடர்கிறாள், " ராமா... இன்னும் ஒன்று இருக்கு ராமா....உன் தம்பி பரதனுக்குத் தான் பட்டாபிஷேகம் நடக்கும். அவன் நாட்டை ஆளுவான். நீ ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்த பின் காட்டிலிருந்து திரும்ப வேண்டும்." சொல்லி விட்டு ...
(அவளால் ராமனைக் காட்டுக்குப் போ என்று சொல்ல வாய் வரலையாம். அதனால் ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்து காட்டிலிருந்து வா என்று சொல்கிறாளாம். வளர்த்த பாசம் தடுக்கிறதோ!)

"இதையெல்லாம் நான் சொல்லவில்லை ராமா. இதெல்லாம் உன் அப்பாவான அரசன் ஆணை. உன்னிடம் சொல்ல சொன்னார். "  என்று முடிக்கிறாள் கைகேயி.

என்னா சாமர்த்தியம்! தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு தசரதன் சொன்னானாம்... எப்படியிருக்குக் கதை..

சரி விடுங்கள்...அது தசரதன் தலை வலி.

இதை விளக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போம்...

அயோத்தியா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்.1690

"ஆழி சூழ் உலகம் எல்லாம் 
   பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கித், 
   தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், 
   புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று, 
   இயம்பினன் அரசன்"என்றாள்

கடலால் சூழப் பட்ட உலகம் முழுவதையும், பரதனே முடி சூடி ஆண்டுக் கொண்டிருக்க நீ நாட்டை விட்டுச் சென்று, தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக் கொண்டு, தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறந்த கொடிய காட்டை அடைந்து , புன்னியத் தீர்த்தங்களில் நீராடி,பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வருவாய் என்று  அரசன் சொன்னான் என்றாள்.

இந்தக் கம்பன் பாடல் ரசிச்சாச்சா?மீண்டும் இன்னொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.

Tuesday, November 19, 2019

கம்பனும், காதலும்(கம்பன் என்ன சொல்கிறான்-11)


Google Images

'ஜானு.....ஜானு ' இது அம்மா கூப்பிடும் குரல்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு,
மீண்டும்,'ஜானு.....' என்று அம்மா குரல் கொடுக்க ஒரு பதிலும் வரவில்லை.

கையில் சாம்பார் கரண்டியுடன், அம்மா ஹாலுக்குள் எட்டிப் பார்க்க, டிவி மட்டும் அனாதையாய் அழுது கொண்டிருந்தது.

'எங்கே தொலைந்தாள் இவள்.' முணுமுணுத்துக் கொண்டே  அம்மா அறையில் எட்டிப் பார்க்க... அங்கே ஜானு கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன் அழகை தானே ரசித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா கூப்பிட்டது ஒன்றும் ஜானு காதில் விழுந்தமாதிரி தெரியவில்லை. 'என்னாச்சு இந்த பெண்ணுக்கு?' அம்மா நினைக்கவும்,  படுக்கை மேல் கிடந்த ஜானுவின் போன் இனிமையாய் ஒலிக்கவும் சரியாயிருந்தது.

போன் ஒலியாலும் ஜானுவின் கண்ணாடி தியானத்தைக் கலைக்க முடியவில்லை போலும்.

அம்மாவிற்குப் புரிந்து விட்டது ஜானுவுக்கு  என்னாச்சுன்னு.

உங்களுக்கும் புரிந்திருக்கும்..இனி ஜானுவாச்சு, அவள் அம்மாவாச்சு....

மேலே சொன்னது டீ.வி சீரியல் ஒன்றின் காட்சி.

கம்பராமாயணத்தில் சீதையும் இப்படித்தான் இருக்கிறாளாம்.

எப்போலேருந்து?

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதிலிருந்து தான் இந்த வியாதியாம் சீதைக்கு.


சீதையின் நெருங்கிய தோழிகள்,'நம் ராஜகுமாரிக்கு என்னாச்சு?' ஏன் இப்படி விட்டத்தையே வெறித்துப் பார்ப்பதும், தனக்குள்ளே சிரிப்பதும்......ஒன்றும் சரியில்லையே " சொல்லிக் கொள்கிறர்கள்.

சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை  'சீதை! சீதை! என்று கூப்பிட சீதை எதையோ நினைத்து தனக்குள் புலம்புகிறாள்.

நீலமாலை சீதையின் தோளைப் பிடித்து உலுக்கி," என்னடி ஆச்சு உனக்கு. என்னடி புலம்புகிறாய்?" கேட்க....

'எனக்கென்ன ஆச்சு? ஒன்றும் இல்லையே ! ஒன்றும் இல்லையே!' சீதை அவசர அவசமாக உரைத்தாள்.

'ஆனால் எனக்குப் புரிஞ்சு போச்சுடி' நீலமாலை சொல்லவும், சீதை பொய்க் கோபத்துடன்,' என்னடி உனக்கு இப்ப புரிஞ்சு போச்சு.?' முறைத்தாள்.

'நீயும் நானும் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பலேருந்து தான் நீ இப்படி இருக்கிறாய்.' சொல்லிக் கொண்டே சிந்திக்க ஆரம்பித்த நீலமாலை தொடர்ந்தாள்...
'ஆ....தெரிந்து விட்டதடி. விளையாடும் போது வெளியே நடந்து போகும் ஒருவரை நீ  கவனிப்பதையும், அவர் உன்னை பார்த்ததையும் கவனித்து விட்டேனடி சீதை.'

'போடி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் யாரையும் பார்க்கலை.' சீதை பொய்யாக மறுத்தாள்.

'சரி விடு சீதை. நீ ஒருவரைப் பார்த்தாயே...அவர் எப்படி இருந்தாரடி' நீலமாலை கேட்க...

சீதை , "அவரா! நான் எங்கேடி அவரைப் பார்த்தேன். அவருடைய 'கரு கரு' கூந்தலைத் தானே  நான் பார்த்தேன்." முகத்தில் வருத்ததுடன் சொன்னாள்.

"ஓ....அவரைப் பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா? அவருடைய கருமையான கூந்தலுக்கே உன் மனம் அலை பாயுதோ" கிண்டலடித்தாள் நீலமாலை.

"ஆனால் அவருடைய முகம் எப்படி இருந்தது தெரியுமா? பௌர்ணமி நிலா மாதிரி இருந்ததடி. " சீதை வெட்கத்துடன்  தொடர...

'ம்ம்ம்ம்....அப்புறம் ?' நீல மாலை மற்றத் தோழிகளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.

சீதையோ தன்னை மறந்து, 'அவருக்குத் தான் எத்தனை நீளமான கைகள். முழங்கால் வரை நீண்ட கைகள்.' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு , கண்களில் காதலுடன் சொல்ல....

"அப்புறம் இன்னொன்றை சொல்லனும் நீல மாலை . " 

"என்னடி சொல்லனும்?" நீலமாலை ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு சீதையை கேட்க..

"அவருக்கு....அவருக்கு  பெரிய நீலமணி மலைகள் போன்ற தோள்கள் ." என்று சீதை சொல்லி விட்டு ....தன்னை சுற்றிப் பார்த்தாள் . தோழிகள் எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சீதை, வெட்கத்துடன் கைகளால் தன் முகத்தை மறைக்க ....

நீல மாலை, அவள் கைகளை எடுத்து விட்டு, " ஆக...அவருடைய கூந்தல், சந்திர வதனம், கைகள், தோள்கள் .....இவையெல்லாம் தான் உன்னைக் கவர்ந்ததோடீ? " கேட்கவும்,

சீதை சட்டென்று அவசரமாக மறுத்தாள்.'ம்ஹூம்.... இவையெல்லாம் என்னைக் கவர்வதற்கு முன்பாக....' இழுத்தாள்.

"கவர்வதற்கு முன்பாக.....? சீக்கிரம் சொல்லுடி சீதை" நீலமாலை ஆர்வத்துடன் கேட்கவும்,

"அவருடைய புன் முறுவல் என் உயிரை அவருடனேயே எடுத்து சென்று விட்டதடி." சீதை சொல்லி விட்டு வெட்கத்துடன் அங்கிருந்து ஓடவும்...

தோழிகள் ,கொல்லென்று சிரித்துக் கொண்டே சீதையைத் துரத்தவும்..., 

நீ ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல் சொல்கிறாயே. என்று என்னைக் கேட்கிறீர்களா?

நானாக சொல்லவில்லை. ராமனைப் பற்றி சீதை சொன்னதாக கம்பன் சொன்னது அப்படியே கண் முன் காட்சியாய் விரிந்தது. அவ்வளவே.

நீங்களும் படித்து ரசியுங்களேன்.....
பால காண்டம்.மிதிலைப் படலம். பாடல் எண் 619

இந்திரநீலம் ஒத்துஇருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.

இந்திர நீலம் என்கிற மணிக்கு ஒப்பாக கருத்த முடியும், முழு நிலவு போன்ற முகமும், முழங்கால் வரை தொங்கும் கைகளும், அழகிய நீல மணி மலைகள் போன்ற தோள்களும் என்னும் இவையே அல்ல.  அவ்வாறாயின், பின் யாது என்றால், அந்தப் புன்னகை தான் இவை எல்லாவற்றுக்கும் முற்பட்டு என் உயிரை கவர்ந்தது.

படித்தவுடன் உங்களுக்கும் மனதில் காட்சி விரிந்திருக்குமே. காட்சியை ரசித்துக் கொண்டிருங்கள்.

மற்றொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...
நன்றி.


Saturday, November 9, 2019

கம்பனும் 'cat walk 'ம்(கம்பன் என்ன சொல்கிறான்-10)

திருமதி ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்ததிலிருந்து நம் ஊர் பெண்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.'Make up' போடுவதென்ன? 'Cat Walk' செய்வதென்ன  என்று பாடாய்  படுகிறார்கள்.
"Cat Walk " நமக்கு புதிதே இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்கள்.. 
"ஓ...அது உன் ஆராய்ச்சியின் முடிவா?" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நானாக எதையும் சொல்லலைங்க...
கம்பர் சொல்வதை வைத்து தான் அந்த முடிவிற்கு வந்தேன்...
வாருங்கள் கோசலை நாட்டுக்குப் போனால் புரிந்து விடும்.

Over to Kosalai now...
தூரத்தில் சிவப்பும் வெள்ளையாக தெரிகிறதே... என்னவாயிருக்கும்? கிட்டே போன பின்பு தான் புரிந்தது. சிவந்த கால்களையுடைய அன்னங்களின் கூட்டம்..இவ்வளவு அன்னங்களா? எங்கேருந்து இப்படி படையெடுத்து வந்திருக்கின்றன? வியந்து போனேன்.

'என்ன பாக்குற? ' கோபம் கொப்பளிக்க கேட்டது அன்னம்.
(இதென்ன அன்னம் பேசுதே! வியப்பிற்கு மேல் வியப்பு...)

'ஒண்ணும் இல்ல ...நீங்கள் இப்படி வரிசையாக Cat Walk செய்வது கண் கொள்ளா காட்சியா இருக்கு.' சொன்னேன்

'க்கும்...' தன் அழகிய கழுத்தை இன்னும் ஒய்யாரமாக திருப்பிக் கொண்டது அன்னம்.
'நாங்கள் அழகா நடக்க 'practice' செய்யறோம்.நீ போ அந்த பக்கம்.' என்னை விரட்டியது தலைவி அன்னம்.

திருநெல்வேலிக்கே அல்வாவா? பெண்கள், அன்னத்தின் நடையைப் பழகுவார்கள்-கேள்விப் பட்டிருக்கிறோம்.
ஆனால் அன்னங்களே நடை பழகுமா? ஒரே குழப்பமாயிருந்தது எனக்கு....
'நீங்கள் நடந்தாலே அழகு தான் . அப்புறம் எதற்கு நீங்களே Cat Walk பழக வேண்டும்?' கேட்டேன்..

'நீ தான் சொல்ற எங்க நடை அழகுன்னு. உங்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வேற மாதிரில்ல சொல்றாரு..' தலைவி அன்னம் வருத்ததுடன் சொல்ல ...

கம்பர் என்ன சொன்னாரோ தெரியலையே... மீண்டும் எனக்குக் குழப்பம்.. அன்னமே என் குழப்பத்தையும் தெளிவு படுத்தியது..

'கோசலை நாட்டுப் பெண்கள் நடையைப் போல் அன்ன நடை இருக்கு. என்று சொல்கிறார் உங்கள் கவிச்சக்கரவர்த்தி.. அதாவது எங்கள் நடையை விடவும், கோசலை நாட்டுப் பெண்கள் நடை மிக அழகு... என்பது தானே அதற்கு அர்த்தம்? அதைத் தானே கம்பர் சொல்ல வருகிறார்?' அன்னம் மிக்க வருத்ததுடன் கேட்டது.

என்னிடம் பதில் இல்லை... அன்னம் தொடர்ந்தது...' அதற்குத் தான் 'Cat Walk' பழகுறோம் நாங்கள்..உனக்கு இப்ப எல்லாம் புரிஞ்சு போச்சா? '

மண்டையைப் பெரிதாய் ஆட்டி வைத்தேன்... பிறகு கேட்டேன்,'எல்லாம் சரி.....இத்தனை அன்னங்கள் நீங்கள் இங்கே பயிற்சியில் இருந்தால் உங்கள் குழந்தை குட்டிகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?'

வெடுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்த அன்னம்,' உன் கரிசனம் எங்களுக்குத் தேவையேயில்லை. ஆனாலும் சொல்கிறேன், எங்கள் குழந்தைகளை (வயல் சேற்றில் இருக்கும்) தாமரைப்பூ மெத்தையில் படுக்க வைத்திருக்கிறோம்.'

இலவம் பஞ்சு மெத்தைத் தெரியும்.அதென்ன தாமரைப்பூ மெத்தை? மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் கம்பர் மேல் பயங்கர கோபமாக இருக்கும் அன்னத்திடம், மற்றொன்றையும் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தயங்கி, தயங்கி....மெதுவாகக் கேட்டேன்...
'அம்மாக்கள் இங்கே நடைப் பழக...அங்கே குழந்தைகளுக்குப் பசித்தால்.....?

'அதெல்லாம் அங்கிருக்கும் எருமை மாடுகள் எங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி விடும். நீ கவலைப் பட வேண்டாம்.' அன்னம் சொன்னது.

அன்னக் குஞ்சுகளுக்கு எருமைகள் பாலூட்டுமா?(Surprise after Surprise.)
 ஆ...திறந்த வாயை நான் மூடுவதற்குள்..

(Here comes the next shocking surprise...)
'அப்புறம்.... எங்கள் குழந்தைகள் தூங்க...அங்கிருக்கும் தவளைகள் தாலாட்டுப் பாடும். இந்த விவரம் போதுமா? இன்னும் ஏதாவது வேண்டுமா? இப்ப நாங்கள் எங்கள் பயிற்சியைத் தொடரலாமா? ' கோபத்துடன் அன்னம் என்னைப் பார்த்துக் கத்த, நான் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்...

பாவம் கம்பர் இப்படி அன்னங்களை அவமானப் படுத்தியிருக்க வேண்டாம்...

அன்னங்களை வெட்கப்பட வைக்கும் கம்பராமாயணப் பாடல் இதோ...
பால காண்டம். நாட்டுப் படலம்44
சேல் உண்ட ஒண்கணாரில் திரிகின்ற
செங்கால் அன்னம்
மால் உண்டநளினப் பள்ளி, வளர்த்திய
மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் 
 கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை 
  தாலாட்டும் பண்ணை.

மீன் போன்ற கண்களையுடைய கோசலை நாட்டுப் பெண்களைப் போல், திரிகின்ற சிவந்த கால்களையுடைய அன்னங்கள், வயல்களில் இருக்கும், அழகிய தாமரை மலர்களாகிய படுக்கையில் தங்கள் இளம் குஞ்சுகளை கிடத்தியிருக்கின்றன. அவைகளுக்கு, காலில் சேறு ஒட்டிய எருமைகள் (ஊரகத்து உள்ள) தன் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால், தானே சொரியும் பாலை அருந்தும். பச்சை நிறத் தேரைகள் தன் ஒலியால் தாலாட்டுப் பாட அவைகள் உறங்கி விடுமாம்.

கற்பனையில் கம்பனுக்கு இணை கம்பனே!
நன்றி! இன்னொரு கம்பன் பாடலுடன் வருகிறேன்.