Image Courtesy : Raja Ravi Press (Public Domain) |
'ஐந்து வேண்டியிருக்கும் நமக்கு'
ஆர்டரும்செய்தாச்சு.
பிறகு அந்த ஆர்டர் பற்றி சுத்தமாக மறந்தும் விட்டேன்.
இரண்டு நாள் கழித்து....
"டிங் டாங்"
கதவைத் திறந்தேன்...... டெலிவரி பாய் .
கையில் பார்சல்.
"எங்களுக்கா?" குழப்பத்துடன் கேட்டேன்.
உள்ளேயிருந்து என்னவர்," பூத்தொட்டி ஆர்டர் செய்தோமே. மறந்துட்டியா?" என்ற சொன்னதும் தான் ... நினைவிற்கு வந்தது.
கையெழுத்திட்டு வாங்கினேன்.
"ஆமாம் . நாம் பெரிய தொட்டியல்லவா ஆர்டர் செய்தோம்." என்று சொல்லிக் கொண்டே பார்சலைப் பிரித்தேன்.
எழுந்து ஹாலுக்கு வந்து கொண்டே ," ஏன் ...கொஞ்சம் சின்ன தொட்டியாக வந்துடுச்சா? " என்னவர் கேட்க..
"கொஞ்சம் சின்னதா?.....
பேனா ஸ்டாண்டை விடவும் கொஞ்சமே கொஞ்சம் பெரிசு. அவ்வளவு தான்." என்று சொல்லிக் கொண்டே அவரிடம் காட்டினேன்.
ஆர்டர் செய்யும் போது அகல உயரத்தைக் கவனிக்காதது யார் தப்பு? சொல்லுங்கள்..... நாங்கள் தப்பாக கணித்து விட்டு.....?
இந்த மாதிரி தாடகையைத் தப்பாக கணித்து விடப் போறோமே என்று கம்பர் கவலைப்பட்டிருப்பார் போல் தோன்றுகிறது.
அதனால் பால காண்டத்தில் தாடகையை எப்படி சிரத்தையுடன் வர்ணிக்கிறார் பாருங்கள்.
ராமன்,.. தாடகை என்கிற ஆக்ரோஷ பெண்மணியோடு சண்டைப் போட்டு ஜெயித்தான் என்ற நாம் சாதரணமாக நினைத்து விடக் கூடாதே என்று மெனக்கெடுகிறார்.
அவளுடைய பயங்கர உருவத்தை எப்படி சித்தரிப்பது என்று ரூம் போட்டு யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அவள் கால்களில் போட்டிருக்கும் சிலம்புகளுக்கிடையில் பெரிய மலைகள் மாட்டிக் கொண்டு நெறிப் பட்டு நொறுங்கிப் போகின்றனவாம்.
அப்படியென்றால் எவ்வளவு பெரிய சிலம்பு? கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பெரிய சிலம்புகள் போட்டிருக்கும் கால்கள் எப்படியிருக்கும். அப்படியென்றால் தாடகை தோற்றம் எப்படியிருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறதல்லாவா!
மிகப்பெரிய உருவம் என்று சொல்லிக் காட்டி விட்டார். ஓகே! ஆனால் அவள் பலம் வாய்ந்தவள் என்று சொல்ல வேண்டுமானால் அவள் weight எவ்வளவு ?
அவளை 'வெயிட் மெஷினில்' நிற்க சொல்லியா weight பார்க்க முடியும்.
கம்பராச்சே ! அவருக்குத் தெரியாத டெக்னிக்கா?
சொல்கிறார் பாருங்கள்...
அவள் 'டங் டங் ' என்று பூமி அதிர நடக்கும் போது மலைகள் எல்லாம் நெறிப்படுவதுமில்லாமல் சில மலைகள் அவள் சிலம்பில் மாட்டிக் கொண்டு விட்டனவாம்.(கொலுசில் புடைவை மாட்டிக் கொள்வது போல) அவளோ தர...தர... என்று மலைகளை இழுத்துக் கொண்டு அனாயசமாக நடந்து வருகிறாளாம்.
அது மட்டுமா! அவள் பாதம் வைக்கும் இடமெல்லாம் பெரிய பெரிய குழிகள் உருவாகிறதாம். அப்படி உருவான குழியில் கடல் நீர் ஓடி வந்து ரொம்பி விடுகிறதாம்.
ஆமாம் அயோத்தி அருகில் எங்கே கடல் வந்தது? என்று கம்பருடைய Geography புலமையை யாரும் சந்தேகிக்க வேண்டாம்.
தாடகை கால் வைத்ததால் ஏற்பட்டக் குழி, Sea Level ஐ விடவும் கீழே போய் விட்டிருக்கும்.
அதனுள் கடல் நீர் ஓடி வர எத்தனை நேரம் பிடிக்கும் சொல்லுங்கள். ? உங்களுக்கு சுனாமி நினைவிற்கு வந்திருக்குமே.(கம்பருடைய கற்பனை கடலை விட ஆழமாக அல்லவா இருக்கிறது!)
அவளைப் பார்த்தாலே யமன் அஞ்சி நடுங்கி குகைக்குள் ஓடி ஒளிந்து கொள்வானாம்.
இப்பேர்பட்ட பயங்கரமான தாடகையை, இளைஞனான ராமன் வதம் செய்யப் போகிறான் என்று சொல்ல வருகிறார் கம்பர்.
தாடகையை விவரிக்கும் கம்பன் வரிகள் இதோ...
பால காண்டம். தாடகை வதைப் படலம். பாடல் எண் 389
சிலம்புகள் சிலம்பு இடை |
செறித்த கழலோடு |
நிலம்புக மிதித்தனள்; |
நெளித்த குழி வேலைச் |
சலம்புக, அனல் தறுகண் |
அந்தகனும் அஞ்சிப் |
பிலம்புக, நிலை கிரிகள் |
பின் தொடர, வந்தாள்.
கால்களில் அணிந்த சிலம்புகளுக்கு இடையே மலைகளைச் செறியும்படி வைத்த கால்களோடு நிலம் கீழே புகும்படி மிதித்தாள். அதனால் நெளியப் பெற்ற குழியில் கடல் நீர் புகுந்தது. அவளைப் பார்த்து நெருப்பென விழிக்கும் வலிமை மிக்க எமனும் பயந்து, குகைக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, நிலத்திலுள்ள மலைகளெல்லாம் பின்னே தொடர்ந்து வர, தாடகை நடந்து வந்தாள்.
ராட்சசியான தாடகையை ராமனின் அம்பு எப்படிக் கொன்றது என்பதைப் பிறகு பார்ப்போமா?
நன்றி.
|
No comments:
Post a Comment