Google Images |
'ஜானு.....ஜானு ' இது அம்மா கூப்பிடும் குரல்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு,
மீண்டும்,'ஜானு.....' என்று அம்மா குரல் கொடுக்க ஒரு பதிலும் வரவில்லை.
கையில் சாம்பார் கரண்டியுடன், அம்மா ஹாலுக்குள் எட்டிப் பார்க்க, டிவி மட்டும் அனாதையாய் அழுது கொண்டிருந்தது.
'எங்கே தொலைந்தாள் இவள்.' முணுமுணுத்துக் கொண்டே அம்மா அறையில் எட்டிப் பார்க்க... அங்கே ஜானு கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன் அழகை தானே ரசித்துக் கொண்டிருந்தாள்.
அம்மா கூப்பிட்டது ஒன்றும் ஜானு காதில் விழுந்தமாதிரி தெரியவில்லை. 'என்னாச்சு இந்த பெண்ணுக்கு?' அம்மா நினைக்கவும், படுக்கை மேல் கிடந்த ஜானுவின் போன் இனிமையாய் ஒலிக்கவும் சரியாயிருந்தது.
போன் ஒலியாலும் ஜானுவின் கண்ணாடி தியானத்தைக் கலைக்க முடியவில்லை போலும்.
அம்மாவிற்குப் புரிந்து விட்டது ஜானுவுக்கு என்னாச்சுன்னு.
உங்களுக்கும் புரிந்திருக்கும்..இனி ஜானுவாச்சு, அவள் அம்மாவாச்சு....
மேலே சொன்னது டீ.வி சீரியல் ஒன்றின் காட்சி.
கம்பராமாயணத்தில் சீதையும் இப்படித்தான் இருக்கிறாளாம்.
எப்போலேருந்து?
அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதிலிருந்து தான் இந்த வியாதியாம் சீதைக்கு.
சீதையின் நெருங்கிய தோழிகள்,'நம் ராஜகுமாரிக்கு என்னாச்சு?' ஏன் இப்படி விட்டத்தையே வெறித்துப் பார்ப்பதும், தனக்குள்ளே சிரிப்பதும்......ஒன்றும் சரியில்லையே " சொல்லிக் கொள்கிறர்கள்.
சீதையின் நெருங்கிய தோழி நீலமாலை 'சீதை! சீதை! என்று கூப்பிட சீதை எதையோ நினைத்து தனக்குள் புலம்புகிறாள்.
நீலமாலை சீதையின் தோளைப் பிடித்து உலுக்கி," என்னடி ஆச்சு உனக்கு. என்னடி புலம்புகிறாய்?" கேட்க....
'எனக்கென்ன ஆச்சு? ஒன்றும் இல்லையே ! ஒன்றும் இல்லையே!' சீதை அவசர அவசமாக உரைத்தாள்.
'ஆனால் எனக்குப் புரிஞ்சு போச்சுடி' நீலமாலை சொல்லவும், சீதை பொய்க் கோபத்துடன்,' என்னடி உனக்கு இப்ப புரிஞ்சு போச்சு.?' முறைத்தாள்.
'நீயும் நானும் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பலேருந்து தான் நீ இப்படி இருக்கிறாய்.' சொல்லிக் கொண்டே சிந்திக்க ஆரம்பித்த நீலமாலை தொடர்ந்தாள்...
'ஆ....தெரிந்து விட்டதடி. விளையாடும் போது வெளியே நடந்து போகும் ஒருவரை நீ கவனிப்பதையும், அவர் உன்னை பார்த்ததையும் கவனித்து விட்டேனடி சீதை.'
'போடி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் யாரையும் பார்க்கலை.' சீதை பொய்யாக மறுத்தாள்.
'சரி விடு சீதை. நீ ஒருவரைப் பார்த்தாயே...அவர் எப்படி இருந்தாரடி' நீலமாலை கேட்க...
சீதை , "அவரா! நான் எங்கேடி அவரைப் பார்த்தேன். அவருடைய 'கரு கரு' கூந்தலைத் தானே நான் பார்த்தேன்." முகத்தில் வருத்ததுடன் சொன்னாள்.
"ஓ....அவரைப் பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா? அவருடைய கருமையான கூந்தலுக்கே உன் மனம் அலை பாயுதோ" கிண்டலடித்தாள் நீலமாலை.
"ஆனால் அவருடைய முகம் எப்படி இருந்தது தெரியுமா? பௌர்ணமி நிலா மாதிரி இருந்ததடி. " சீதை வெட்கத்துடன் தொடர...
'ம்ம்ம்ம்....அப்புறம் ?' நீல மாலை மற்றத் தோழிகளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.
சீதையோ தன்னை மறந்து, 'அவருக்குத் தான் எத்தனை நீளமான கைகள். முழங்கால் வரை நீண்ட கைகள்.' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு , கண்களில் காதலுடன் சொல்ல....
"அப்புறம் இன்னொன்றை சொல்லனும் நீல மாலை . "
"என்னடி சொல்லனும்?" நீலமாலை ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு சீதையை கேட்க..
"அவருக்கு....அவருக்கு பெரிய நீலமணி மலைகள் போன்ற தோள்கள் ." என்று சீதை சொல்லி விட்டு ....தன்னை சுற்றிப் பார்த்தாள் . தோழிகள் எல்லோரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சீதை, வெட்கத்துடன் கைகளால் தன் முகத்தை மறைக்க ....
நீல மாலை, அவள் கைகளை எடுத்து விட்டு, " ஆக...அவருடைய கூந்தல், சந்திர வதனம், கைகள், தோள்கள் .....இவையெல்லாம் தான் உன்னைக் கவர்ந்ததோடீ? " கேட்கவும்,
சீதை சட்டென்று அவசரமாக மறுத்தாள்.'ம்ஹூம்.... இவையெல்லாம் என்னைக் கவர்வதற்கு முன்பாக....' இழுத்தாள்.
"கவர்வதற்கு முன்பாக.....? சீக்கிரம் சொல்லுடி சீதை" நீலமாலை ஆர்வத்துடன் கேட்கவும்,
"அவருடைய புன் முறுவல் என் உயிரை அவருடனேயே எடுத்து சென்று விட்டதடி." சீதை சொல்லி விட்டு வெட்கத்துடன் அங்கிருந்து ஓடவும்...
தோழிகள் ,கொல்லென்று சிரித்துக் கொண்டே சீதையைத் துரத்தவும்...,
நீ ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல் சொல்கிறாயே. என்று என்னைக் கேட்கிறீர்களா?
நானாக சொல்லவில்லை. ராமனைப் பற்றி சீதை சொன்னதாக கம்பன் சொன்னது அப்படியே கண் முன் காட்சியாய் விரிந்தது. அவ்வளவே.
நீங்களும் படித்து ரசியுங்களேன்.....
பால காண்டம்.மிதிலைப் படலம். பாடல் எண் 619
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.
இந்திர நீலம் என்கிற மணிக்கு ஒப்பாக கருத்த முடியும், முழு நிலவு போன்ற முகமும், முழங்கால் வரை தொங்கும் கைகளும், அழகிய நீல மணி மலைகள் போன்ற தோள்களும் என்னும் இவையே அல்ல. அவ்வாறாயின், பின் யாது என்றால், அந்தப் புன்னகை தான் இவை எல்லாவற்றுக்கும் முற்பட்டு என் உயிரை கவர்ந்தது.
படித்தவுடன் உங்களுக்கும் மனதில் காட்சி விரிந்திருக்குமே. காட்சியை ரசித்துக் கொண்டிருங்கள்.
மற்றொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...
நன்றி.
No comments:
Post a Comment