Showing posts with label வில். Show all posts
Showing posts with label வில். Show all posts

Sunday, January 12, 2020

கம்பனும், கருத்து சுதந்திரமும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-16)



Image Courtesy : Raja Ravi Press (Public Domain)

சூடான நெய்யில் ஜீரகம் போட்டு  ரசத்திற்கு தாளித்து விட்டு கேசை ஆஃப் செய்யவும்,

"காச் ......மூச்" என்று சத்தம் காதில் விழவும் சரியாயிருந்தது.

'யாரது சண்டை  போடுவது?' .... என்று ஹாலுக்குள் எட்டிப் பார்த்தேன்.

என்னவரோ டிவியை விட்டு கண்ணையே எடுக்கவில்லை.
அட...சண்டை மண்டை உடைந்து கொண்டிருந்தது டிவியில் தான்.

சாதரணமாகவே அரசியல் எனக்குப் புரிபடாத ஒன்று.  அதிலும் இந்த டிவி சண்டைகளில் எல்லாம் ஆர்வமே இருப்பதில்லை எனக்கு.

இவருக்கு மட்டும் எப்படி இந்த சண்டை புரிகிறது? இல்லை வெட்டி சீன் போடுகிறாரா? ...பார்த்து விடவோம் என்று நானும் சண்டையை கவனிக்க ஆரம்பித்தேன்.

"கருத்து சுதந்திரம் இல்லை.... கருத்து சுதந்திரம் இல்லை.... "என்று விடாமல் ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். வேறு யார் பேசுவதும் காதில் விழ விடாமல் மீண்டும் மீண்டும் " கருத்து சுதந்திரம் போயே போச்சு. நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடையாது ." என்று உச்ச ஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார்.

எனக்கு சுத்தமாக புரியவேயில்லை. "மஹானுபவரே!இப்படி உச்சஸ்தாயில், கருத்து சுதந்திரம் இல்லை என்று கத்தும் அளவுக்கு உங்களுக்கு நாடு சுதந்திரம் கொடுத்திருக்கே.வேறென்ன கருத்து சுதந்திரம் போச்சு என்கிறீர்கள்? இந்தியாவுக்கே கேட்கிறார் போல கத்துகிறார்.  பிறகு என்ன சுதந்திரம் இல்லை என்கிறார்? ஒன்றுமே புரியவில்லை

சரி ..போ... அரசியலாவது ஒன்றாவது....என்று தோன்றியது எனக்கு. என்னவோ கத்திக் கொண்டு போகட்டும். நமக்கும் அரசியலுக்கும் எட்டாத தூரம் என்று விட்டு விட்டேன். 

ஆனால் இந்த சமயத்தில் கம்பனை நினைக்காமல் இருக்க முடியவில்லை....

விசுவாமித்திரர் ராம லக்‌ஷமணர்களை அழைத்துக் கொண்டு காட்டு வழியே நடந்து செல்கிறார்.

நாமும் காட்டு வழியே அவர்களைப் பின் தொடர்ந்த்து செல்வோம் வாங்க...
(கற்பனையிலாவது பரந்தாமனை காண்போம் வாங்க..)

சுவாரஸ்யமான உரையாடல் ...

"தசரத குமாரர்களே ! இங்கு தான் அருகே என் பர்ண சாலை இருக்கிறது. அங்கு தான் நாங்கள் யாகம் செய்கிறோம். அந்த யாகத்திற்கு இடையூறு வராமல் காக்கவே உங்களை அழைத்து வந்தேன்." விசுவாமித்திரர் சொல்ல..

பணிவுடன் ராம லக்ஷ்மணர்கள் " அப்படியே செய்கிறோம்." என்று சொல்ல

விசுவமித்திரர் மேலே தொடர்ந்தார்...
" அரக்கர்கள் மாமிசங்களையும், ரத்தத்தையும் மழையெனப் பொழிந்து எங்கள் யாகத்தை கெடுக்கிறார்கள்.அதிலும் அந்தத் தாடகை இருக்கிறாளே....அப்பப்பா....என்ன கொடூரம்! ....என்ன கொடூரம்!  பார்ப்பதற்கு  பெரிய எரிமலை ஒன்று நடந்து வருவது போலத் தோன்றும்..அவளைப் பார்த்தால் எமனே நடுங்கி ஒளிந்து கொள்வான் என்றால் பார்த்துக் கொள் ...ராமா"

"அவள் செய்யும் அட்டகாசம் தாங்கவே முடியாது..அவளைத் தான் முதலில் நீ அழிக்க வேண்டும் ராமா." என்று சொல்லி முடிக்கவும் 

ராமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "போரில் பெண்ணைக் கொல்வது தர்மம் இல்லையே.அதிலும் நான் செய்யப் போகும் கன்னிப் போர் இது...  ஒரு பெண்ணைக் கொன்று தர்மத்தை மீறுவதா? 
Killing a woman is a crime in war protocols.That too in my maiden ordeal.... OMG!
ஆனால் ஆசானையும் அவமதிக்க முடியாது.என்ன செய்வது....மனம் பிசைகிறது ராமனுக்கு.  
(பெண்ணென்றால் பேயும் இரங்கும். கருணையின் வடிவமான பரந்தாமனுக்கு சொல்லவும் வேண்டுமா.?)

 முனிவரிடம் பெண் கொலைப் பாவம் இல்லையா? கேட்டுப் பார்ப்போமா? நினைத்துக் கொண்டான்.  உடனே மனதை மாற்றிக் கொண்டு விட்டான் ராமன்.

பிறகு, வேறு வினையே வேண்டாம். .அடுத்த கணமே ," எனக்குத் தெரியாத தர்மம், பாவ புண்ணியம் எல்லாம்  சிறுவர்களாகிய, உங்களுக்குத் தெரிந்து விட்டதோ என்று முகம் 'ஜிவுஜிவுக்கக்' கோபப் படுவாரே...அதோடு விடுவாரா?. இந்தாப் பிடி... 'சாபம்' என்று சபித்து விடுவாரே"  நினைத்துக் கொண்டு அமைதி காத்தான் ராமன்.

ராமனுடைய பேரமைதியை வைத்தே புரிந்து கொண்டு விட்டார் விசுவாமித்திரர். பரந்தாமனுக்கே பாடம் எடுக்கும் ஆசான் ஆயிற்றே! அவருக்குத் தெரியாதா?

ராமனைப் பார்த்து," ராமா அவளை நீ பெண்ணென்று நினைக்கிறாய். ஆனால் அவள் ஒரு அரக்கி ... என்று அவளுடைய History, Geography எல்லாம் சொல்கிறார்."

மேலும் தொடர்கிறார்...." அவள் இந்தக் கானகத்தில் ஒருத்தரை விடவில்லை. தரையெல்லாம் பார். மண் சிவப்பாக இருப்பது இவள் உபயம் தான். எல்லோரையும், அடித்து சாப்பிடுவதே அவள் பழக்கம்." என்று சொல்லி விட்டு ராமனைப் பார்த்தார் முனிவர்.

இவ்வளவு சொல்லியும், ராமன் வில்லில் நாணேற்றாமல் அமைதியாய் இருந்தான்.

புரிந்து விட்டது விசுவாமித்திரற்கு,"ராமா நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று புரிந்து விட்டது ராமா. ஒருத்தரை விடாமல் கொல்கிறாள் என்று சொல்வதற்கு என்னையும், மற்ற ரிஷிகளையும் உயிரோடு விட்டு தானே வைத்திருக்கிறாள். அப்படி முனிவர் சொல்வது போல் ஒன்றும் கொடூரமானவள் இல்லை போலிருக்கிறது." என்று தானே நினைக்கிறாய்.

ராமா ! நானும் மற்ற ரிஷிகளும் அவளுக்கு "Noodles" போல் தெரிகிறோம் என்று நினைக்கிறேன்.  அவளுடைய பசிக்கு நாங்கள் அவள் கடை வாய் பற்களுக்குக் கூட காண மாட்டோம். அதனால் தான் எங்களை விட்டு வைத்திருக்கிறாள். நானே இன்னும் சற்று புஷ்டியாக இருந்திருந்தால் இன்னேரம் என்னையும் கொன்று முடித்திருப்பாள். அவளை பெண் என்றே எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தயங்காமல் வில்லை எடு.. நாணேற்று...தாடகையை வதம் செய்! என்று விசுவாமித்திரர் முடித்தார்.

கம்பர் இதை எப்படி நான்கே வரிகளில் சொல்கிறார் என்று பார்ப்போமா?...

தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்


மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! 

தீமை  என்று இருப்பவையாகிய  எல்லாச் செயல்களையும்  செய்துமுடித்து, எம்மைப் போன்ற  முனிவர்களைச் (சாரமில்லாத) சக்கை  என்று  உண்ணாது  விட்டாள். அவள் செய்த தீய செயல்களில்  இதுவே  குறை. இத்தகையவளை  என்னவென்று  நினைப்பது? மணிகளாலான  அணிகலன்களை  அணிந்திருக்கும் ராம பிரானே!இத்தகைய  கொடுஞ்செயல்   உடையவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது . 

அருமையாக இல்லை கம்பனின் படைப்பு...! ரசித்துக் கொண்டிருங்கள்...
மற்றொரு கம்பராமாயணப் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.


Tuesday, December 17, 2019

கம்பனும், ஆன்லைனும்.(கம்பன் என்ன சொல்கிறான் -15)


Image Courtesy : Raja Ravi Press (Public Domain)
" பாருங்க நீங்க சொல்ற பூத்தொட்டி ஆன்லைனில் கிடைக்குது. எத்தனை வேணும் நமக்கு?" அவரிடம் கேட்கவும்,

 'ஐந்து வேண்டியிருக்கும் நமக்கு' 

ஆர்டரும்செய்தாச்சு.

பிறகு அந்த ஆர்டர் பற்றி சுத்தமாக மறந்தும் விட்டேன்.

இரண்டு நாள் கழித்து....

"டிங் டாங்"

கதவைத் திறந்தேன்...... டெலிவரி பாய் .

கையில் பார்சல்.

"எங்களுக்கா?" குழப்பத்துடன் கேட்டேன்.

உள்ளேயிருந்து என்னவர்," பூத்தொட்டி ஆர்டர் செய்தோமே. மறந்துட்டியா?" என்ற சொன்னதும் தான் ... நினைவிற்கு வந்தது.

கையெழுத்திட்டு வாங்கினேன்.

"ஆமாம் . நாம் பெரிய தொட்டியல்லவா ஆர்டர் செய்தோம்." என்று சொல்லிக் கொண்டே  பார்சலைப் பிரித்தேன்.

எழுந்து ஹாலுக்கு வந்து கொண்டே ," ஏன் ...கொஞ்சம் சின்ன தொட்டியாக வந்துடுச்சா? " என்னவர் கேட்க..

"கொஞ்சம் சின்னதா?.....
 பேனா ஸ்டாண்டை விடவும் கொஞ்சமே கொஞ்சம் பெரிசு. அவ்வளவு தான்." என்று சொல்லிக் கொண்டே அவரிடம் காட்டினேன். 

ஆர்டர் செய்யும் போது அகல உயரத்தைக் கவனிக்காதது யார் தப்பு? சொல்லுங்கள்..... நாங்கள் தப்பாக கணித்து விட்டு.....?

இந்த மாதிரி தாடகையைத் தப்பாக கணித்து விடப் போறோமே என்று கம்பர் கவலைப்பட்டிருப்பார்  போல் தோன்றுகிறது.

அதனால் பால காண்டத்தில் தாடகையை எப்படி சிரத்தையுடன் வர்ணிக்கிறார் பாருங்கள்.

ராமன்,.. தாடகை என்கிற ஆக்ரோஷ பெண்மணியோடு சண்டைப் போட்டு ஜெயித்தான் என்ற நாம் சாதரணமாக நினைத்து விடக் கூடாதே என்று மெனக்கெடுகிறார்.

அவளுடைய பயங்கர  உருவத்தை எப்படி சித்தரிப்பது என்று ரூம் போட்டு யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். 


அவள் கால்களில் போட்டிருக்கும் சிலம்புகளுக்கிடையில்  பெரிய மலைகள் மாட்டிக் கொண்டு நெறிப் பட்டு நொறுங்கிப் போகின்றனவாம்.

அப்படியென்றால் எவ்வளவு பெரிய சிலம்பு? கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பெரிய சிலம்புகள் போட்டிருக்கும் கால்கள் எப்படியிருக்கும். அப்படியென்றால் தாடகை தோற்றம் எப்படியிருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறதல்லாவா!


மிகப்பெரிய உருவம் என்று சொல்லிக் காட்டி விட்டார். ஓகே! ஆனால் அவள் பலம் வாய்ந்தவள் என்று சொல்ல வேண்டுமானால் அவள் weight எவ்வளவு ?

அவளை 'வெயிட் மெஷினில்' நிற்க சொல்லியா weight பார்க்க முடியும். 

கம்பராச்சே ! அவருக்குத் தெரியாத டெக்னிக்கா?

சொல்கிறார் பாருங்கள்...

அவள் 'டங் டங் ' என்று பூமி அதிர நடக்கும் போது மலைகள் எல்லாம் நெறிப்படுவதுமில்லாமல் சில மலைகள் அவள் சிலம்பில் மாட்டிக் கொண்டு விட்டனவாம்.(கொலுசில் புடைவை மாட்டிக் கொள்வது போல)  அவளோ தர...தர... என்று மலைகளை இழுத்துக் கொண்டு அனாயசமாக நடந்து வருகிறாளாம்.

அது மட்டுமா! அவள் பாதம் வைக்கும் இடமெல்லாம் பெரிய பெரிய குழிகள் உருவாகிறதாம். அப்படி உருவான குழியில் கடல் நீர் ஓடி வந்து ரொம்பி விடுகிறதாம். 

ஆமாம் அயோத்தி அருகில் எங்கே கடல் வந்தது? என்று கம்பருடைய Geography புலமையை யாரும் சந்தேகிக்க வேண்டாம்.

தாடகை கால் வைத்ததால் ஏற்பட்டக் குழி, Sea Level ஐ விடவும் கீழே போய் விட்டிருக்கும்.  
அதனுள் கடல் நீர் ஓடி வர எத்தனை நேரம் பிடிக்கும் சொல்லுங்கள். ? உங்களுக்கு சுனாமி நினைவிற்கு வந்திருக்குமே.(கம்பருடைய கற்பனை கடலை விட ஆழமாக அல்லவா இருக்கிறது!)

அவளைப் பார்த்தாலே யமன் அஞ்சி நடுங்கி குகைக்குள் ஓடி ஒளிந்து கொள்வானாம்.

இப்பேர்பட்ட பயங்கரமான தாடகையை, இளைஞனான ராமன் வதம் செய்யப் போகிறான் என்று சொல்ல வருகிறார் கம்பர்.

தாடகையை விவரிக்கும் கம்பன் வரிகள் இதோ...
பால காண்டம். தாடகை வதைப் படலம். பாடல் எண்  389

சிலம்புகள் சிலம்பு இடை
    செறித்த கழலோடு
நிலம்புக மிதித்தனள்;
    நெளித்த குழி வேலைச்
சலம்புக, அனல் தறுகண்
    அந்தகனும் அஞ்சிப்
பிலம்புக, நிலை கிரிகள்
    பின் தொடர, வந்தாள்.

கால்களில் அணிந்த சிலம்புகளுக்கு இடையே  மலைகளைச் செறியும்படி வைத்த கால்களோடு நிலம் கீழே புகும்படி மிதித்தாள். அதனால் நெளியப் பெற்ற குழியில் கடல் நீர் புகுந்தது. அவளைப் பார்த்து நெருப்பென விழிக்கும் வலிமை மிக்க எமனும் பயந்து, குகைக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, நிலத்திலுள்ள மலைகளெல்லாம் பின்னே தொடர்ந்து  வர, தாடகை நடந்து வந்தாள்.

ராட்சசியான தாடகையை ராமனின் அம்பு எப்படிக்  கொன்றது என்பதைப் பிறகு பார்ப்போமா?

நன்றி.



Thursday, October 3, 2019

கம்பனும், கஃப்தானும்.(கம்பன் என்ன சொல்கிறான்?- 5)

Image Courtesy: Google.
கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்-4) படிக்க இங்கே க்ளிக்கவும்.


பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயனித்துக் கொண்டிருந்தோம்.சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணம். 

ஒரு முதிய தம்பதி என் இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்தனர்.

'மைக்'கில்  கஃப்தான் வினய் ( பைலட்) எந்த உயரத்தில் பறக்கிறோம்.... எப்ப போய் சேருவோம்.....இத்யாதி..இத்யாதி... 'கர கர' குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

நானோ"எங்களுக்கு இந்த சங்கதியெல்லாம் தேவையில்லை கஃப்தானே! சென்னையில் பத்திரமாகத் தரையிறக்குங்கள். போதும் ." என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.(மனதில்).

சிறிது நேரத்தில் விமான பணிப் பெண் கொடுத்த ஒரு குட்டியூண்டு சோன்பப்டி, சமோசா, சாப்பிட்டு, காபி என்கிற பேரில் குடுத்ததை உள்ளே தள்ளி விட்டு, எல்லோருமே கண்ணயர ஆரம்பித்திருந்திருப்போம்.

மீண்டும் கஃதான் குரல் எங்களை எழுப்பி விட்டது.
" எல்லோரும் சீட் பெல்டை மாட்டுங்கள். தரையிறங்கப் போகிறோம்."

அதற்குள் சென்னை வந்து விட்டோமா .அப்பாடி...என்று நான் நினைக்க ஆரம்பிக்கவும்...முன் இருக்கை மாமி," சென்னை அதுக்குள்ள வந்துடுத்தா? தூக்கமா வருது " என்று சொல்லிக் கொண்டே பெரிய கொட்டாவி விட்டார்.

"ஆமாம்டி மதுரா ! ராமன் வில்லை ஒடித்த நேரத்தில் சென்னைக்கு  வந்துட்டோம் பாரேன். நீ மிச்ச தூக்கத்தை ஆத்துல போய் தூங்கிக்கலாம்."  என்று மாமா சொல்ல...

எனக்கு கம்பனின் வரிகள் நினைவில் வந்து மோதியது...

விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை ஜனகனின் அரண்மனைக்கு அழைத்து வந்து விட்டார். 

பிறகு, விசுவாமித்திரர்,ராம லஷ்மணர்களைப் பற்றி ஜனகனிடம் விரிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ராமனின் கை வண்ணம், கால் வண்ணம் என்று சொல்லிக் கொண்டே போகிறார்.

எனக்கோ பதை பதைக்கிறது. இந்த விசுவாமித்திர முனிவருக்கு விவஸ்தையே இல்லையோ.
"கை வண்ணம் , கால் வண்ணம் எல்லாம் சொல்கின்ற நேரமாய்யா இது. ராமன், ஜனகனின் மாப்பிள்ளையானவுடன், சீதை தன் அப்பாவிடம் ஆத்துக் காரர் பெருமை சொல்லிக் கொள்ள மாட்டாளா என்ன? . ஆத்துக்காரர் பெருமையை 'டமாரம்' அடிக்க பெண்களுக்கு சொல்லித் தரனுமா?
அதனால் நீங்கள் முதலில் ராமனை வில்லில் நாணேற்ற சொல்லுங்கள் முனிவரே. வேறு யாராவது முந்திக் கொண்டு விடப் போகிறார்கள்" என்று விசுவாமித்திரரிடம் கத்த வேண்டும் போல் தோன்றியது.

கம்பராமாயணம் படிப்போர் பலருக்கும்  இந்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும்.

ராமன் தானாகட்டும். வந்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல் விசுவாமித்திரர் எப்பொழுது தலை அசைப்பார் என்று காத்து கிடக்கிறானாம்." ராமா! சீதை வேணுமா இல்லையா? எழுந்திரு. இப்படி உட்கார்ந்திருந்தால் ஆகாதப்பா." என்று சொல்லத் தோன்றியது.

ஒரு வழியாக விசுவாமித்திரர் 'பிசினஸ்'க்கு வந்தார்.
ஆமாம்....
 ராமனைப் பார்த்துக் கண்ணசைவாலேயே ," ராமா போ! போய் வில்லை எடுத்து நாணேற்று " ஏன்று சொன்னாராம். 

உடனே ராமன், 'விருட்'டென்று எழுந்து போய் சிவ தனுசை கையில் அனாயாசமாக எடுத்ததைத் தான் எல்லோரும் பார்த்தார்களாம்.

" டமால்....." என்று மிகப் பெரிய சத்தம். எல்லோரும் அலறிப் புடைத்திருப்பார்கள் .

எல்லாம் ராமன் கை வண்ணம் தானாம்.

சிவ தனுசு  முறிந்த ஓசை அது. எல்லோருக்கும் ராமன் வில்லை எடுத்தது தெரியும், பின் முறித்ததைத் தான் கேட்டனராம். நாண் ஏற்றுகிறேன் பேர்வழியென்று  வில்லை முறித்தே விட்டானாம். 
"ராமா...இரு...இரு.. சிவ தனுசை முறித்ததற்கு பரசுராமருடன் ஒரு தனிப் பஞ்சாயத்து காத்திருக்கு."

ஆக.... எல்லோரும் என்ன பார்த்தார்களாம்?

"எடுத்தது கண்டனர்.இற்றது கேட்டனர்."

இதைக் கம்பன் நான்கே வரிகளில் ஒரு வீடியோ பதிவாக்கி விட்டான் பாருங்கள்.

பால காண்டம். கார்முகப் படலம்.படல் எண்:783

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.

ண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்ற யாவரும், ராமன் தன் திருவடியால் அவ்வில்லின் நுணியை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாணேற்றியதையும், ராமனின் செயலின் வேகத்தால், காண முடியாதவராயினர். அன்றியும் மனத்தாலும் இன்னது தான் நிகழும் என்று கருதவும் இயலாதவராயினர். ஆயினும் ராமன் தன் கையால் அவ்வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். பின் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.

 பாருங்களேன்..கம்பனின் காவியம் நமக்கு ராமாயணத்தை கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறது இல்லையா?

மீண்டும் ஒரு கம்பன் பாடலுடன் சந்திப்போம்.