பட உதவி ; www.dinakaran.com |
'ஙொ....ய் ... 'சத்தம் சன்னமாய் வந்தது.
"காதருகில் 'கிசு கிசு' என்று கொசு என்ன ரகசியம் சொல்கிறது. " கிண்டலாக அவரிடம் கேட்டேன்.
" Please Wait. சீக்கிரமே உன் காதுக்கும் கொசு வழியாகவே அந்த ரகசியம் எட்டும்." அவரும் பதிலுக்குக் கிண்டலடிக்க,
(கொசு விரட்டிக்கெல்லாம் 'பெப்பே' என்கிறது கொசு.)
கொசுவைப் போல வண்டுகளும் ரீங்காரம் செய்யுமே.
வாங்க...மிதிலைக்குப் போய் அதையும் பார்த்து விடலாம்.
மிதிலாபுரி சொர்க்கபுரியாக காட்சியளிக்கிறதே!
மக்களெல்லாம் என்ன மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஆடுவதும், பாடுவதுமாய்... இருக்காதா பின்னே. திருமகளே அங்கே அவதரித்திருக்கிறாளே! வளத்திற்கு என்ன குறைவு இருக்கப் போகிறது சொல்லுங்கள்.
சரி....விஷயத்திற்கு வருவோம்...வண்டுகளும் கூட்டம் கூட்டமாய் ரீங்காரம் செய்கின்றன.
அப்படி என்ன தான் ரகசியம் பேசுகின்றன? கேட்போமா?
" எதுக்கடி இப்படி கத்தறே..அதுவும் என் காது கிட்ட வந்து?"
" அதுவா... அங்க பார். அந்தப் பெண்ணை ."
" ஏன் அவளுக்கு என்ன?"
அதற்குள் இன்னொரு வண்டு வீல் என்று அலற,
'உனக்கென்ன ஆச்சு?'
'அந்தப் பெண் படும் பாட்டைப் பார். எனக்குப் பயமா இருக்கு.'
கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவு வண்டுகளும் பதட்டத்துடன் பேசிக் கொள்கின்றன.
'எனக்கும் பயமா இருக்குடி. இந்தப் பெண்கள் ஆடும் ஆட்டத்தில் அவர்களின் மெல்லிய இடை வலிக்காதோ? எவ்வளவு மெல்லிய இடை. ஆட்டத்தின் அதிர்ச்சியைத் தாங்குமா? '
இதைத் தான் அந்த வண்டுகள் பேசுகின்றனவாம்.
அப்படி என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் மிதிலாபுரி பெண்கள்?
ஊஞ்சல் தான்..... வேறொன்றுமில்லை.
எங்கே இருக்கு ஊஞ்சல்?
பாக்கு மரத்தில்.....
சரி... இந்த வண்டுகள் எங்கிருந்து வருகின்றன. வேறெங்கேருந்து? பெண்கள் வேகமாக ஆடும் போது, அதிர்ச்சியினால் அவர்கள் சூடியிருக்கும் பூக்களிலிருந்து தான் மேலே எழும்பியிருக்கின்றன.
அவை மேலே எழும்பும் போது ஏற்படும் ஆரவாரம், பெண்களின் இடைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதைப் போல் இருந்ததாம் கம்பருக்கு. (கற்பனையில் கம்பருக்கு இணை கம்பரே!)
'மாசுறு பிறவி போல' ஊஞ்சல் ஆடுவதை வர்ணிக்கிறார்.
இறைவனடி சேர்வதும், பிறப்பெடுப்பதும் எப்படி மீண்டும் மீண்டும் நடைபெறுகிறதோ அப்படி ஊஞ்சல் முன்னும் பின்னுமாய் ஆடுகிறதாம்.
(கம்பரைத் தவிர யாரால் இப்படி ஊஞ்சல் ஆடுவதற்கு உவமை சொல்ல முடியும், சொல்லுங்கள்.)
ஒரேயடியாக தத்துவத்தில் நம்மை மூழ்கடித்து விடாமல் ' மைந்தர் சிந்தையொடு உலவ' என்று சட்டென்று ஜனரஞ்சகமாக சொல்லி முடிக்கிறார்.
அதாவது, இடை மெலிந்த அழகான பெண்கள் ஊஞ்சலாடும் போது, அவர்களைப் பார்க்கும் இளைஞர்கள் மனமும் கூடவே ஆடியதாம்.
பால காண்டம் . மிதிலைக் காட்சிப் படலம். பாடல் எண். 573.
பூசலின் எழுந்த வண்டு
மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல
வருவது போவது ஆகிக்,
காசு அறு பவளச் செங்காய்
மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர்
சிந்தையொடு உலவக் கண்டார்.
குற்றம் அற்ற பவளம் போல சிவந்த காய்களையுடைய, மரகதம் போல பச்சை நிறப் பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே பெண்கள் ஆடுகிறார்கள். குற்றம் நிறைந்த பிறவி போல (மாறி மாறி) வருவதும், போவதுமாக ஊஞ்சல் ஆட, (பார்க்கும்) ஆண்களின் மனமும் கூடவே ஆடுகின்றன. ஆரவாரத்தோடு மேலே எழுந்த வண்டுகள் அவர்கள் இடையின் மென்மைக்காக இரக்கப்பட்டு ஒலிப்பதையும் (ராம லக்குமணர்) பார்த்தார்கள்.
ஒரு வீடியோ பதிவைப் போல் இருக்கும் இந்த வரிகளில் மெய் மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறதே!
இன்னொரு கம்பர் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.
No comments:
Post a Comment