Image by Ramachandra Madhwa Mahishi, Illustrated by Balasaheb Pandit Pant Pratinidhi [Public domain] |
"கம்பனும் தையல் மெஷினும்" படிக்க இங்கே க்ளிக்கவும்.
'டிங் டாங்'
கதவைத் திறந்தேன். கொரியர் வந்திருந்தது.
கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு உள்ளே திரும்பப் போனேன்.
"ஹலோ மாமி" எதிர் வீட்டு விஜய் கையசைக்க நானும் ஒரு ஹலோ சொல்லவும்,
"யார் அது " இவர் கேட்டுக் கொண்டே வந்தார்.
"எதிர் வீட்டு விஜய் தான். ஆபீஸ் போறான் போலிருக்கு. எனக்கும் அப்படியே ஒரு ஹலோ...."
சொல்லி விட்டுத் தொடர்ந்தேன்....
" விஜயை ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரொம்பவும் நல்ல பையன். ஒரு கெட்டப் பழக்கம் இருக்கணுமே .... ம்ஹூம்... அவன் குணத்தில் ஒரு தப்பு சொல்ல முடியுமா பாருங்கள். இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல பையன்! "
"ராஜி! முதலில் எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்து விட்டு உன் 'விஜய் அவார்ட்' ஃபங்க்ஷனை வைத்துக் கொள். ஒரு ஹலோ சொல்லிட்டுப் போய்ட்டானாம். இவளுக்குத் தாங்க முடியல. அவார்ட் ஃபங்க்ஷனுக்கு தேதி குறித்து விட்டாள்." கிண்டலடித்தார் .
அந்த வார இறுதியில் 'Forum Mall' போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். சிக்னலில் கார் நிற்க ...ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில்
"யார் அது? விஜய்யா?"
அவரும் பார்க்க," ஆமாமாம்... நீஅவார்ட் குடுத்த ரொம்ப நல்ல பையன் தான்"
"ஆனா... உன் அவார்ட்டை அவனுக்குக் குடுக்க முடியுமான்னு தெரியலையே! என்ன செய்கிறான் பார்.."
"என்ன? " கேட்டுக் கொண்டே நான் அவனைப் பார்க்க, அவனோ"புஸ்....புஸ்....புஸ்.." வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.
அதற்குள் சிக்னல் விழவும், நாங்கள் நகர்ந்தோம்.
நான் அமைதியாய் உட்கார்ந்திருக்க,இவர் கண்ணை ரோட்டில் வைத்துக் கொண்டே," என்ன மேடம் அமைதியாகி விட்டீர்கள்? விஜய் அவார்ட் ஃபங்க்ஷன் கேன்சல்ட்டா? " நக்கலாக சிரித்தார்.
"ராஜி ! அவன் ஹாஸ்டலில் படித்தவன் .... இந்த பழக்கமெல்லாம் அவன் ஃபெரண்ட்ஸ் உபயமாகத் தான் இருக்கும் . அவன் இப்பவும் நல்ல பையன் தான் ராஜி.நீ உன் அவார்டைக் குடுக்கலாம்." இவர் என்னை சமாதானப் படுத்த ...
என்னால் ஒத்துக் கொள்ள் முடியவேயில்லை. "Fair Weatherஇல் Good Peopleஆக!" இருப்பது என்ன பெரிசு...சொல்லுங்கள்...
ராமாயண கைகேயியும் இந்த ரகம் தான் போலிருக்கு.
ராமனுக்கு முடி சூட்டு விழா தீர்மானித்து விட்டு, கைகேயி மாளிகைக்குத் திரும்புகிறான் தசரதன்.
" கைகேயி...கைகேயி " என்று சந்தோஷமாகக் கூப்பிட்டுக் கொண்டே நுழைகிறான் தசரதன்.
ஆனால் பேரமைதியாக இருக்கிறது மாளிகை.
என்னமோ தப்பாக இருக்கே! நினைத்துக் கொண்டே கைகேயியைத் தேடுகிறான் தசரதன்.
படுக்கையறையில் அவனுடைய இனிய ராணி கீழே விழுந்துக் கிடக்கிறாள். உடல் நலக் குறைவோ ...இல்லை யாராவது இவளை அவமதித்திருப்பார்களோ...
பதறிப் போய் கூப்பிட்டுப் பர்க்கிறான்... பதில் வரவில்லை.
அவள் தான் கை தேர்ந்த நடிகையாச்சே! சொல்லியா தர வேண்டும்... கிட்டே வந்து, தட்டி எழுப்புகிறான். அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும், கிளசரின் போட்டாற் போல் கண்ணீர் மாலை மாலையாக வருகிறது.
அவள் சந்தோஷப் படுவாள் என்று நினைத்து," உன் ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம்" என்று சொல்லவும்...
இன்னும் வேகமாகத் தேம்புகிறாள் கைகேயி...
'எதுக்கு இப்ப அழற...?' கெஞ்சிப் பார்க்கிறான்.
"மானே! தேனே! கைகேயிக் கண்ணே " கொஞ்சிப் பார்க்கிறான்.
பல கெஞ்சல் , கொஞ்சல்களுக்குப் பிறகுத் தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள் கைகேயி...
எப்படி இருந்திருக்கும் தசரதனுக்கு," இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? "
"ராமா! ராமா! " என்று இவள் கொஞ்சும் ராமனையா காட்டுக்குப் போக வேண்டும் என்று இவளே சொல்கிறாள்?
"என்ன ஆச்சு இவளுக்கு ?"
"கைகேயி ! நீ தானே ராமனுக்கு விற் பயிற்சி, போர் பயிற்சி என்று சொல்லிக் குடுத்தவள்.. என் ராமன்! என் ராமன் ! என்று கொண்டாடியவள். நானும், கொசல்யாவும் ராமனிடம் காட்டியப் பாசத்தைப் போல் பன்மடங்கு காட்டியவள் ஆச்சே நீ. நீயா இப்படி சொல்வது? நம்ப முடியவில்லையே!"
கைகேயிற்கு இன்னும் ராமனை வளர்த்தப் பாசம் மேலோங்கி தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ராமன் காடு போக வேண்டும் என்று தானே அவள் வரம் கேட்க வேண்டும். அப்படி அவளால் கேக்க முடியல. ராமன் காடு போக வேண்டும் என்று சொல்லாமல் ,"சீதைக் கேள்வன்(சீதையின் கணவன்) " காடு போக வேண்டும் என்று சொல்கிறாளாம்.
கைகேயி கொஞ்சம் சொல்லேன்," நீ நல்லவளா? கெட்டவளா?"
கைகேயின் பதில் இதுவாகத்தான் இருக்கணும்," நான் 'Fair Weather-Good People' ரகத்தை சேர்ந்தவள் .
கம்பருக்கும் நம்மைப் போலவே கைகேயி மேல் சரியான கோபம் வந்திருக்கும்.
அவரும் "இந்தா உனக்கு ஒரு அவார்ட் "என்று கைகேயிற்கு கோபத்துடன் அவார்ட் குடுக்கிறார் பாருங்கள்...
"தீயவை யாவினும் சிறந்த தீயாள்" என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அவார்ட் .
'கெட்டவளிலேயே சிறந்த கெட்டவள்' விருது. சிம்பிளா சொல்லனும்னா 'சிறந்த வில்லி' அவார்ட்.
(மிக சரியான அவார்ட் தான் கொடுத்திருக்கிறார்.)
கம்பர் எப்படி சொல்கிறார் பார்ப்போமா...
அயோத்தியா காண்டம் . கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண் 1593
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது:சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; எனப் புகன்று நின்றாள்;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.
கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும் மேம்பட்ட கொடியவளான கைகேயி,"நீ கொடுத்த இரு வரங்களுள், ஒரு வரத்தினால் என் மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும். மற்றொன்றினால் சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்" என்று சொல்லி மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.
இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தசரதன் எப்படி எதிர் கொண்டான்?
அடுத்தப் பதிவில் பார்ப்போம்...