Friday, October 18, 2019

கம்பனும், தையல் மெஷினும் .(கம்பன் என்ன சொல்கிறான்?-7)



Image courtesy: Wikkimedia Commons
கம்பனும் Hidden Agendaவும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

"விநாச காலே விபரீத புத்தி " என்று சும்மாவா சொன்னார்கள்.  கையடக்கமான தையல் மெஷினை, கையடக்கமான விலையில் ஆன்லைனில் வங்கியாச்சு.


உடனே 'கட கட' வென்று போனது வந்தது என்று எல்லாம் தைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப என் புது புடைவை ஓரம் அடிக்கப் போகிறேன்" சொல்லிக் கொண்டே மெஷினில் புடைவையை ஓரம் மடித்து தைக்க ஆரம்பித்தேன்..

சில வினாடிகள் தான்.... சத்தம் ஒரு மாதிரியாக வர..பார்த்தால் தையல் விழவில்லை. பதறிப் போய் என்னவென்று பார்த்ததில்....பாபினில் நூல் காலி.

மெஷினிலும் பாபினில் நூல் சுத்தும் வசதி வைக்கவில்லை என்பது எனக்குப் புரிய ஒரு மணி நேரம் ஆச்சு.

மெஷினை வாங்கும் முன்பு இந்த பாபின் விஷயத்தை நான் கவனித்திருக்க வேண்டாமோ?  விட்டு விட்டேனே.என் மூளைக்குக்கு எட்டவில்லையே! என்னை நானே திட்டிக் கொண்டேன்...

கைகேயியும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டாள் என்பதை மந்தரை எடுத்து சொன்ன பிறகு தான் புரிந்திருக்கிறது அவளுக்கு.

எப்படின்னு பாக்கலாம் வாங்க...

ராமனுக்கு முடி சூட்டு விழா என்று மந்தரை சொன்னது கைகேயிடம் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.மாறாக சந்தோஷப் படுகிறாள். (அவள் தான் ஒரு Hidden Agenda வைத்திருந்தாளே. அது என்ன? என்று கேட்பவர்கள் இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.)

மந்தரைக்கு கைகேயின் மகிழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்தியது. அவளும் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாள்...

பரதன் உனக்கு மகன் தானே! அவன் நலனில் உனக்கு அக்கறை இல்லையா? கௌசல்யாவிற்கு ஏவல் செய்யப் போகிறாயா? 
மூத்தவனுக்குத் தான் மணி முடி என்றால் , தசரதன் இருக்கும் போதே எதற்கு ராமனுக்கு மணி முடி? - இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்து கைகேயியை அசைக்கப் பார்க்கிறாள் மந்தரை.

கைகேயி மசியவில்லையே!

மந்தரைக்குப் புரிந்து விட்டது. இவள் இப்படியெல்லாம் சொன்னால்  மசிய மாட்டாள். என் முதுகைக் காயப்படுத்திய ராமனுக்கு மணி முடியா? எப்படியாவது தடுக்க வேண்டுமே...யோசித்தாள் மந்தரை...

அம்மா வீட்டு sentiment தான் இதற்கு சரியான வழி என்று தீர்மானித்து, " இதைக் கேள் ராணி... இத்தனை நாள் சீதையின் அப்பா ஜனகன் , உன் அப்பா கேகய மன்னனுடன் சண்டைக்குப் போகாமல் இருந்ததுக்கு யார் காரணம். தெரியுமா?"

"உன் ஆம்படையானுக்கு (தசரதனுக்கு) பயந்து தான்."

"ராமன் ராஜாராமன் ஆகி விட்டால்... . ...அவ்ளோதான்......ஜனகனுக்கு நல்லாவே குளிர் விட்டுடும். சொல்லிட்டேன். மாமனார் பின்னாடியே,  ராமனும் வில் அம்புடன் புறப்பட மாட்டான்னு என்ன நிச்சயம் சொல்லு?

ஆக... உன்னாலான உபயத்தை உன் பிறந்த வீட்டுக்கு செய்யப் போறே ! ஓகே! நான் யார் அதைத் தடுக்க.."

இதைக் கேட்டதும், கைகேயி சட்டென்று மந்தரையைப் பார்த்தாள்.

தன் செயலால்  தன் அம்மா வீட்டிற்கு ஒரு துண்பம் என்றால் எந்தப் பெண் தான் அதை செய்வாள்.

இந்த அம்மா வீட்டு செண்டிமெண்ட் 'பசக்' என்று பிடித்துக் கொண்டது .

இது தான் சமயம் என்று இன்னும் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் , " அது மட்டுமா ராணி. இன்னும் கேள்...ராமன் மன்னன் என்றால் லஷ்மணனுக்கு சரிசமமான மரியாதை கிடைக்கும். ஆனால் பரதனுக்கு அது கிடைக்குமா?" என்று கேட்டாள்.

இதை மட்டுமா கேட்டாள்? 

" நாளை ராமனுக்கு குழந்தைகள் பிறந்தால், கௌசிப் பாட்டி...கௌசிப் பாட்டி ன்னு கௌசல்யாவைக் கொண்டாடுமா?உன்னையா? யோசிச்சிக்கோ. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனிமேல் உன் இஷ்டம்." என்று சொல்லியிருப்பாள். 
(கம்பன் சொல்லவில்லை இதை . என் யூகம் இது.)

அதனால் தான் கைகேயி மனம் மாறியிருக்க வேண்டும்.  
" ஆமாம் இல்ல... இதெல்லாம் விட்டு விட்டேனே.என் மூளைக்கு தோணவேயில்லையே! நல்ல வேளை இப்பவாவது மந்தரை சொன்னாளே" என்று மனம் மாறிய கைகேயி

மந்தரையிடமே இதற்குத் தீர்வும் கேட்கிறாள்.
 அதற்கு மந்தரை ," உன்னிடம் தான் தசரதன் குடுத்த இரண்டு வரம் இருக்கே  . அதை இப்ப கேட்காமல் அப்புறம் எப்ப கேட்க போறே ராணி."

"பரதன் நாடாள - ஒரு வரம்..
ராமன் காடு புக  - ரெண்டாம் வரம்.அவ்ளோ தானே.சகல பிரச்சினையும் முடிஞ்சுடும் .இல்லையா ராணி." 

நம்மைப் போலவே கைகேயியும் குழம்பியிருக்க வேண்டும்.

பரதன் நாடாளும் வரம் ஓகே...
ராமன் காடு புகும் வரம்- Why Mantharai? Why?

அங்க தான் மந்தரையின் சூழ்ச்சி தெரிகிறது. ராமன் அயோத்தியிலேயே இருக்க, பரதன் ஆட்சி செய்தால் என்ன ஆகும்?
மக்களின் "Sympathy wave" ராமனுக்குக் கிடைத்து விடுமே.அது பரதனுக்கு ஆபத்தாக முடியலாம்.
ராமன் காட்டிற்குப் போனாலும் 'sympathy wave' இருக்கத் தான் செய்யும். ஆனால் சில நாட்களில் மக்கள் ராமனை  மறந்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். மக்கள் ராமனை சுத்தமாக மறக்க ஓரிரு வருடங்கள் போதாது. நிறைய நாட்கள் தேவைப்படும். கேட்கறதுன்னு ஆச்சு..  பதினான்கு வருடங்கள் ராமனுக்கு வனவாசம் என்றால் சரியாயிருக்கும் என்று நினைத்திருப்பாள் மந்தரை..அதனால் தான் இந்த உபாயம் சொல்கிறாள் என்று நினைக்கிறேன்.
(என்னா வில்லத்தனம்! என்னா வில்லத்தனம்!)

கம்பனின் கவியைப் பார்ப்போமா...
அயோத்யா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம். பாடல் எண்:1577

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் 
பெரு வனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால், செழுநிலம் எல்லாம் 
ஒருவழிப் படும்உன்மகற்கு, உபாயம் ஈது என்றாள் 

அவ்விரண்டு வரங்களுள் ஒரு வரத்தால் அரசாட்சியை உன் மகனதாக ஆக்கிக் கொண்டு, மற்றொன்றினால் ராமன் பெரிய காட்டின் கண் பதினான்கு ஆண்டுகள், அயோத்தியிலிருந்து நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலைய செய்வாயாக. அப்படி செய்தால், உன் மகனாகிய பரதனுக்கு வளப்பமான உலகம் முழுதும் அடங்கி நேர்படும். இதுவே உபாயமாகும்.

இதை கைகேயி எப்படி செயல் படுத்தினாள் என்று கம்பன் சொல்வதை அடுத்தப் பதிவில் பார்ப்போமே...

நன்றி.


No comments:

Post a Comment