image courtesy : Wikkimedia Commons. |
நானும், அவரும், பக்கத்து வீட்டுப் பெண் ஜானுவின் திருமணத்திற்கு சென்றிருந்தோம்.
திருமணம் முடிந்த பின்பு, விருந்துண்ண டைனிங் ஹாலுக்கு சென்றோம்.
அத்தனையும் அருமையோ அருமை. அந்த பதர் பேணி..... ஆஹா....என்ன ருசி....என்ன ருசி....( இன்னும் பதர் பேணி ருசி நாவிலேயே இருக்கு)
நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து இள நீர் பாயசம் பரிமாற ...
எனக்கு எதை சாப்பிடுவது... எதை விடுவது என்று தெரிய வில்லை.
என் மனசாட்சி வேறு," ராஜி... சர்க்கரையாய் உள்ளே தள்ளுகிறாய்? ஜாக்கிரதை...நீ சுகர் பேஷண்ட் .நினைவிருக்கிறதா?" எச்சரிக்க...
"மட நெஞ்சே! நீ கொஞ்சம் சும்மாயிருக்கிறாயா? " என்று மனதிற்கு ஒரு அதட்டல் போட்டு விட்டு....
மனம் சொன்னது காதிலேயே விழாதது போல் அவரிடம்,
"இளநீர் பாயசம் என்ன அருமை." சொன்னேன் .
"இளநீர் பாயசம் என்ன அருமை." சொன்னேன் .
உடனே அவர், பரிமாறிய அன்பரிடம்," இங்கே பாருங்கள்....இந்த மேடமிற்கு இன்னும் கொஞ்சம் பாயசம் விடுங்கள்." என்று சொல்லவும்,..
பரிமாறுபவர் சட்டென்று முதலில் என் கணவர் இலையில் தாராளமாக பாயசத்தை பரிமாறினார். பின்னர் தான், என் இலைக்குப் பரிமாறினார்.
என்னவரிடம்," ஓ...இது தான் பகக்த்து இலைக்குப் பாயசம் என்பதோ! நல்ல Hidden Agenda!" என்று சொன்னேன்.
அப்படித் தான் கைகேயிக்கும் ஒரு hidden agenda இருந்திருக்கிறது.
விளக்கமாக சொல்கிறேனே .....
கைகேய நாட்டின் இளவரசி கைகேயி. அவள் வைத்தது தான் அங்கே சட்டமாயிருந்திருக்கிறது.
தசரதனை மணந்தாள். தசதரதனின் மனதிற்குப் பிடித்த இனிய ராணி. அவள் விருப்பதிற்கு அயோத்தியிலும் மறுப்பில்லை. ஆக...அயோத்தியிலும் அவள் வைத்தது தான் சட்டமாக இருந்தது.
எல்லாம் சரியகத் தான் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் ராமன் பிறந்ததும், முதல் மைந்தன் என்ற பாசத்தால் தசரதன் சற்றே தடம் மாற ஆரம்பித்திருப்பான்.
"Power தன் கையிலிருந்து கௌசல்யாவின் கைக்கு மாற ராமன் காரணமாகி விடுவானோ?"
Smartஆன கைகேயி அதை உணர்ந்து விட்டாள்.
ராமன் தானே, தசரதனை கௌசல்யாவின் அந்தப்புரத்திற்கு இழுப்பது?
ஓகே! இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. ராமனை நம் மாளிகையிலேயே வளர்ப்போம். தன் மகன் பரதன் வேண்டுமானால் கௌசல்யாவிடம் வளரட்டும். என்று தீர்மானித்தாள்.
உடனே செயல் படுத்தியும் விட்டாள். அவள் நினைத்தபடியே தசரதன் கைகேயியின் மாளிகையிலேயே தங்க ஆரம்பித்தான்.
மனதை மகிழ்விக்கும், ராணியும், பிரிய மகனும் இருக்கும் இடத்தில் தானே மன்னனும் இருப்பான். அதுவே நடந்தது.
கைகேயி தான் நினைத்ததை முடித்துக் கொண்டு விட்டாள்.
நாளை ராமனுக்கு முடி சூட்டு விழா !
ஆத்திரத்துடன் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க... மந்தரை ஓட்டமும், நடையுமாக கைகேயின் மாளிகைக்கு வருகிறாள்.
கைகேயி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளாம். உலுக்கி எழுப்பி, கோபத்தில் சொல்கிறாள் மந்தரை ," உங்களுக்கு பெரிய அநீதி இழைக்கப் பட்டிருக்கிறதை அறியாமல் தூங்குகிறீர்களே ராணி ."
"எனக்கு அநீதியா? அதுவும் அயோத்தியிலா? என்னடி உளறுகிறாய்? "
"ஆமாம் ! நாளை ராமனுக்கு முடி சூட்டு விழாவாம். சொல்லிக் கொள்கிறார்கள்.
அப்படியென்றால் உங்கள் மகன் பரதனுக்கு மன்னர் பட்டம் இல்லையா? ராமன் மன்னன் என்றால் கௌசல்யா தானே ராஜமாதா . அப்பொழுது உங்கள் நிலை என்ன?"
"ஹா...ஹா...ஹா... தாதியான உனக்குத் தெரிவது, ராணியான எனக்குத் தெரியாதா?அதற்குத் தானேடி ராமனை நான் வளர்த்தேன். என்னிடம் வளர்ந்த பாசத்தால், ராமன் என் பேச்சை எப்பவுமே மீற மாட்டான். 'Proxy' ஆட்சி செய்து விட்டுப் போகிறேன்.(அப்பவேவா?)ராமன் ஆட்சிப் புரிந்தாலும், கட்டளையிடுவது நானாகத் தானே இருப்பேன். என் கட்டளை தானே சாசனம்."
என்று மனதில் நினைத்துக் கொண்டே மந்தரையிடம்,"ராமனுக்கு முடி சூட்டு விழாவா! எத்தனை மகிழ்ச்சியான செய்தி சொல்கிறாய் மந்தரை! இந்தா ரத்தின மாலை ." என்று கழுத்தில் கிடந்த விலையுர்ந்த ரத்தின மாலையை மந்தரைக்கு அளிக்கிறாளாம் கைகேயி.
(ஆமாம். நான் கம்ப ராமாயணம் முழுவதும் படித்து விட்டேன். இப்படியெல்லாம் எங்கேயும் கம்பர் சொல்லவில்லையே." என்கிறீர்களா?
நான் தான் hidden agenda என்று ஏற்கனவே சொல்லி விட்டேனே. எல்லாவற்றையுமா கம்பர் சொல்லிக் கொண்டிருப்பார்? நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையும், நானாக சொல்லவில்லை.
கம்பன் சொல்வதை வைத்து, இப்படி....இப்படி என்று புரிந்து கொண்டேன்.)
இப்ப கம்பனின் கவியைப் பார்ப்போமா?
அயோத்யா காண்டம். மந்திரப் படலம். பாடல் எண் 1547.
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஒர் மாலை நல்கினாள்
தூய்மையான கைகேயிக்கு, பேரன்பு என்கின்ற கடல் ஆரவாரித்து மேல் கிளம்ப, களங்கமில்லாத முகமாகிய சந்திரன் பிரகாசித்து, மேலும் ஒளியடைய, மகிழ்ச்சி எல்லை கடக்க, மூன்று சுடர்களுக்கும் தலைமைப் பெற்றது போன்றதாகிய ரத்தின மாலையை மந்தரைக்குப் பரிசாக அளித்தாள்.
கைகேயிக்குத் தான், தன் hidden agenda வேலை செய்யும் என்கிற நம்பிக்கை இருக்கே. அப்புறம் ஏன் அவள் ராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற சிந்தனை வருகிறதா?
அதற்கும் கம்பனிடம் பதில் இருக்கு...
அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்...
No comments:
Post a Comment