Sunday, November 3, 2019

கம்பனும், Negotiationம்.(கம்பன் என்ன சொல்கிறான்?-9)







கம்பனும் Awardம் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எப்பவும் போல் பிரேக்பாஸ்ட் தயாரிக்க சென்றேன். 

"இன்றைக்கு என்ன?" என்னவர் கேட்க....

"இன்றைக்கு இடியாப்பம் செய்யட்டுமா? இட்லி, தோசை, உப்புமா...என்று எனக்கே போர் அடிக்குது." சொன்னேன்.

"ராஜி ! எனக்கு தோசை போதும். அலட்டிக்காதே! "அவர் சொல்ல 

ஆனால் நான் இடியாப்பம் தான் செய்வது என்கிற முடிவோடு, மாவைப் பிசைந்தேன்.

இடியாப்ப அச்சை நாழியில் போட்டு விட்டு, மாவை உள்ளே வைத்து , இட்லி தட்டில் பிழிய ஆரம்பித்தேன்.

மாவு இறங்கி வர வேண்டுமே! ம்ஹூம் .... மாவு இரக்கம் காட்டாமல் அசையாமல் இருந்தது.

ஏன் மாவு 'தர்ணா' செய்கிறது? 

அச்சில் கண் அடைச்சிருக்கோ? 
செக் செய்தேன்.  அப்படி ஒன்றும் இல்லையே....

" என்ன ரொம்ப நேரமாக சத்தத்தையே காணோம்." சொல்லிக் கொண்டே என்னவர் கிச்சனில் ஆஜர்.

அவர் பங்கிற்கு... அவரும்  முயல... மாவு மனம் இரங்கவேயில்லையே!அன்றைக்கு இடியாப்பம் கேன்சல் ஆனது தான் மிச்சம். 

இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதோ?

ஆனால், சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளத் தெரிந்த தாசரதனுக்கு, பிறகு சமாளிக்க முடியாமல் திணறி, கடைசியில் செத்தே போனான்.


எப்பவோ போர் களத்தில் கைகேயி, தசரதன் வெற்றிக்கு காரணமாயிருக்க...

அப்ப மனைவியின் மகிமையில் உச்சி குளிர்ந்து போய், " உனக்கு நான் ஏதாவது gift தரணுமே அன்பே". சொல்லியிருப்பான்.

அவளோ, "நீங்கள் என் காதல் கணவன். நீங்களே எனக்குப் பெரிய gift. தனியா நீங்க தரணுமா?" அதெல்லாம் வேண்டாம்." சொல்லியிருப்பாள்.

விட வேண்டியது தானே தசரதன். இல்லை ஏதாவது ஒரு சினிமா டிராமான்னு கூட்டிட்டுப் போய் அசத்தியிருக்கலாம். 

அதெல்லாம் ரொம்ப சின்ன கிப்ட்னு  நினச்சா, "  அருமையான ஹில் ஸ்டேஷன் எதுக்காவது டூர் அழைத்துப் போயிருக்கணும்."

இல்லை... அரசன் தானே! வைரத்தாலும், வைடூர்யத்தாலும், பவுனாலும், நகை நட்டு வாங்கிக் குடுத்து முடித்திருக்கலாம்.

அதெல்லாம் விட்டுட்டு , " கைகேயி இந்தா எடுத்துக்கோ ரெண்டு வரம் தரேன்." சொன்னா என்னத்தை சொல்றது.

குடுத்தது தான் குடுத்தானே தசரதன்," அதுக்கு ஒரு டைம் லிமிட்...? ம்ஹூம். " 
Limited Time Offerனு ஒரு catchஆவது  வச்சிருக்கலாம். அதுவும் இல்ல....

அட்லீஸ்ட் "*conditions apply " என்று மிக மிக சிறிய எழுத்துக்களால் எழுதி, குடுத்திருக்கலாம். எல்லாத்தையும் மறந்துட்டு, கைகேயின் மேலுள்ள அளவற்றக் காதலால்.... வரத்தைக் குடுப்பானேன் இப்ப முழி பிதுங்க நிற்பானேன்.

இப்ப சொல்றானாம், " என் கண்ணை வேண்டுமானாலும் எடுத்துக்கோ." அப்படின்னு..

தசரதா! கைகேயி உன் கண்ணை வச்சுகிட்டு என்ன செய்யப் போறா?அவளோட ரெண்டு கண்ணும் நல்லாவே இருக்கு! 

போதாததுக்கு அவளோட கண் அல்லவா உன் சேர் மேல் விழுந்துடுத்து. . 

"Your Highness! Power mongering Kaikeyi needs your chair  & not your eye. " என்று தசரதனைப் பார்த்துக் கத்த வேண்டும் போல் இருக்கு.

இதையும் தாண்டி தசரதன், "என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கோ !" அப்படின்னு சொல்றானாம். 

இல்லை....இல்லை....பயமுறுத்துறானாம்.

கைகேயி " ஹ.....இது பனங்காட்டு நரி..இந்த சலசலப்புக்கு அஞ்சாது." என்று நினைத்திருப்பாளோ.

தசரதனுக்குப் புரிந்தது இவள் மசியவில்லை என்று. 

அடுத்து   negotiation tableற்குக் கூப்பிட்டுப் பார்க்கிறானாம்...

அவளிடம் ," உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஓகே ! பரதன் நாடாளும் வரம்-தந்து விடுகிறேன். இன்னொரு வரம் என்று ஒன்று கேட்டாயே! அதை மட்டும்... ப்ளீஸ்.... விட்டு விடேன் கைகேயி." என்று கெஞ்சுகிறானாம்.

அவனால் 'ராமன் காடு புகும் வரம்' என்று சொல்லக் கூட முடியவில்லை பாருங்கள். 'இன்னொரு வரம் 'என்று மட்டுமே சொல்கிறானாம்.

(என்னைக் கேட்டால் ,'ராமன், சீதை, லக்‌ஷ்மணன் 14 ஆண்டுகள் காட்டில் கஷ்டப்பட்டதற்கு, கைகேயி காரணம் இல்லை தசரதா! நீயும், உன் வரங்களும் தான் காரணம்' என்று சொல்வேன்.)

கம்பன் எவ்வளவு அழகாக இந்த சீனை நாலே வரியில் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்...
 அயோத்யா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்  1611.
'கண்ணே வேண்டும் என்னினும்
ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும்
இன்றே உனது அன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!
பெறுவாயேல்
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
மற' என்றான்

'பெண்னாகப் பிறந்தவளே! வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே! என் கண்களே வேண்டும் என்றாலும் நான் உனக்குக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன். எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை விரும்பினாலும், இப்பொழுதே உன் வசமல்லவா? வரத்தையே பெற விரும்புவாயானால் நாட்டை மட்டும் பெற்றுக் கொள்கொள்வாய். மற்றொரு வரத்தை மட்டும் மறந்து விடு' என்றான்.

ஒரு மன்னன் எவ்வளவு கீழே இறங்கி கெஞ்சுகிறான் பாருங்கள். 

தேவையா தசரதா உனக்கு இது? யோசி....

 நன்றி...வேறொரு கம்பனின் பாடலுடன் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment